சென்னை: திருச்சியில் ரூ.290 கோடியில் அமைய உள்ள நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் தந்தை பெரியார், சென்னையில் அறிஞர் அண்ணா, மதுரையில் கலைஞர் நூலகத்தை போன்று திருச்சியில் காமராஜர் பெயரில் நூலகம் அமைக்கப்படும். கோவை மற்றும் திருச்சி நூலக பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மதுரை நூலகம் ஓராண்டில் கட்டிமுடிக்கப்பட்டு 14 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டபேரவையில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், திருச்சியில் அமைய உள்ள நூலகத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் என்று கொள்கை விளக்க குறிப்பில் உள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள நூல் நிலையங்களுக்கு மாபெரும் தலைவர்களுடைய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பொதுப்பணித்துறையின் 4 ஆண்டு சாதனை விளக்க குறிப்பில் ஏற்கனவே இந்த அவையில் என்னால் அறிவிக்கப்பட்டவாறு திருச்சியிலே ரூ.290 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டு நூலகத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிந்தேன்.
திராவிட மாடல் அரசை பொருத்தவரை கலைஞரின் கரத்தால் கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் என பெயர் சூட்டப்பட்டது. மதுரையில் கலைஞரின் பெயரால் நூலகம் அமைக்கப்பட்டு அதுவும் ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டு மாபெரும் சாதனையை இந்த துறை செய்துள்ளது. இதுவரை 16 லட்சம் பொதுமக்களும், மாணவர்களும் இந்த நூலகத்தினால் பயனடைந்துள்ளார்கள்.
அதைத்தொடர்ந்து அண்மையில் கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம் அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று இந்தப்பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
திருச்சியில் அறிவிக்கப்பட்டள்ள நூலகத்திற்கும் கடந்த மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கோவையில் பெரியார், சென்னையில் அண்ணா, மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல திருச்சியில் அமைய இருக்க கூடிய நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். எனவே தமிழ்நாட்டில் கிராமம் முழுவதும் பள்ளிகளை தொடங்கி மதிய உணவை அளித்து லட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்ணை திறந்து வைத்து,
தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட காமராஜர் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும். திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மூலமாக வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன் என்று அறிவித்தார்.
The post திருச்சியில் ரூ.290 கோடியில் அமைய உள்ள நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.