![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/02/37162058-stalin.gif)
திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பெருந்திரளணி `ஜாம்புரி' என்ற பெயரில் மாநாடு போல் நடந்து வருகிறது.
இந்த மாநாட்டில் இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் 4 வெளிநாடுகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் சாரண-சாரணியர்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டிகள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த விழாவை கடந்த 28-ந்தேதி தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் ஒவ்வொரு நாளும் இதில் பங்கேற்றுள்ள மாணவ- மாணவிகள் தங்களது மாநிலத்தின் கலை, பண்பாடு தொடர்பான கலாசார நிகழ்ச்சிகளிலும், குழு மற்றும் தனிநபர் திறன் தொடர்பான போட்டிகளிலும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளனர். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் முக்கிய அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு சாரண-சாரணியர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் இன்று மதியம் 2 மணி அளவில் திருச்சிக்கு வருகை தந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் சாரண-சாரணியர் இயக்க வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டார்.
இந்நிலையில் பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி விமான நிலையம் மற்றும் அவர் பயணம் செய்ய உள்ள வழித்தடங்களில் `டிரோன்'கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் இருந்து அவர் தங்க உள்ள ஓட்டல் வரையும் சாலைகள் சீரமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். தி.மு.க. கொடிகளும் கட்டப்பட்டு உள்ளது.