திருச்சி விமான நிலையத்தில் 255 ஏக்கரில் ஓடுபாதை விரிவாக்க பணிக்கு தமிழக அரசு அனுமதி: 14 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்தது

4 weeks ago 4

திருச்சி: திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்க பணிக்காக 255 ஏக்கரை பயன்படுத்தி கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுகளாக நீடித்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.  திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1112 கோடியில் புதிய முனையத்தை பிரதமர் மோடி கடந்த ஜன.2ம் தேதி திறந்து வைத்தார். இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள திருச்சி பன்னாட்டு விமான நிலையம் ஆண்டுக்கு 45 லட்சம் பயணிகளை கையாளக்கூடிய வசதிகள் உள்ளது. ஒரே சமயத்தில் 10 விமானங்களில் உள்ள பயணிகளை கையாள முடியும். 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 240 விமானங்களை தரையிறக்கி, புறப்படலாம். ஒரே நேரத்தில் 3,900 பயணிகளை கையாள முடியும். 750 கார்கள், 250 டாக்சிகள், 10 பஸ்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

புறப்பாடுக்காக 10 கேட்கள், வருகைக்காக 6 கேட்கள், 60 செக் இன் கவுன்டர்கள், இமிகிரேஷன் பிரிவுக்காக தலா 40 கவுன்டர்கள், 15 எக்ஸ்ரே மெஷின்கள், 3 விஐபி லவுஞ்கள் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு கோபுரம் மூலம் ‘ரன்வேயின்’ எந்த ஒரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும். இந்த நிலையில், ஏற்கனவே செயல்பட்டு வந்த விமான நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய விமான ஓடு பாதையையே புதிய விமான முனையம் திறந்த பிறகும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட சில பெரிய ரக விமானங்கள் திருச்சிக்கு இயக்கப்படுவதில்லை.

அதற்கு காரணம் சிறிய ஓடுபாதை இருப்பதால், அந்த விமானங்கள் இறங்குவதில் சிரமம் ஏற்டும். எனவே தற்காலிகமாக இந்த ஓடு பாதையை விமான நிலையம் பயன்படுத்தி வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற விமான நிலைய வளர்ச்சி பணிகள் குறித்த கூட்டத்தில் விமான ஓடு பாதையை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் (பொ) கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,‘‘ திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஓடு பாதை 8,136 அடியாக தற்போது பயன்பாட்டில் உள்ளது.

ஓடு பாதையை விரிவாக்கம் செய்வதற்கு என்று ஒன்றிய அரசிடமும், மாநில அரசிடமும் அனுமதி கேட்டு, அதற்கான நில ஒதுக்கீடுக்கான அறிக்கை அனுப்பி இருந்தோம். அதன்படி மொத்தம் 512.59 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், அதில் 345.50 ஏக்கர் மாநில அரசிடம் கோரியிருந்தோம். அதில் 255.22 ஏக்கர் நிலத்தை விமான நிலையம் பயன்படுத்தி கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி கடிதம் கொடுத்துள்ளது. மேலும் 166.97 ஏக்கர் நிலம் பாதுகாப்புதுறைக்கு சொந்தமான நிலமாக உள்ளது. எனவே மாநில அரசிடமிருந்து மீதம் உள்ள 90 ஏக்கரும், பாதுகாப்புதுறையிடம் உள்ள 166.97 ஏக்கரும் கையகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்னை கடந்த 14 ஆண்டுகளாக நீடித்து வந்தது. தமிழ்நாடு அரசின் முயற்சியால் தற்போது இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவாக்கம் செய்வதன் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான விமானங்கள் திருச்சிக்கு வந்து செல்லும். இதனால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். முக்கியமாக, சரக்கு விமானங்கள் அதிகளவு வந்து செல்லும். இதன் மூலம் அதிக விமானங்களை கையாளக்கூடிய விமான நிலையம் என்ற பெயர் திருச்சி விமான நிலையத்திற்கு கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.

The post திருச்சி விமான நிலையத்தில் 255 ஏக்கரில் ஓடுபாதை விரிவாக்க பணிக்கு தமிழக அரசு அனுமதி: 14 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்தது appeared first on Dinakaran.

Read Entire Article