செங்கல்பட்டு: சிங்கபெருமாள்கோவில் பகுதியில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், மேம்பால பணியினை விரைவில் முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதில், 80 சதவிகிதத்திற்கு அதிகமான பணிகள் முடிவடைந்தநிலையில் மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் சென்னையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் யூடர்ன் செல்லும் சாலை முடப்பட்டு சிங்கபெருமாள்கோவில் கடந்து திருத்தேரி பகுதியில் வாகனங்கள் யூடர்ன் செய்து ஒரகடம், பெரும்புதூர் பகுதிக்கு வாகனங்கள் செல்கின்றன. இதனால் தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சென்னை நோக்கி செல்கின்றன.
இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்க்குள்ளாகியுள்ளனர்.சிங்கபெருமாள்கோவில் முதல் பாரேரி, மகேந்திராசிட்டி என சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கார், தனியார் தொழிற்சாலை பேருந்து ஆம்னி பேருந்து அரசு பேருந்து வேன் கனரக லாரி என அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி 30 நிமிடங்கள் தவித்து வருகின்றன.
இது ஒரு புறம் இருக்க சிங்கபெருமாள்கோவில் பகுதியிலும் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதாலும் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைந்து முடித்து வாகன ஓட்டிகள்களுக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
The post திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்; சிங்கபெருமாள்கோவில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.