*போலீசார் விசாரணை
மணப்பாறை : திருச்சி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை வேளச்சேரி ராம்நகரை சேர்ந்த சிவபெருமாள் மகன் பிரபாகரன்(37). சேலத்தை பூர்வீகமாக கொண்ட பிரபாகரன், சென்னையில் மனைவி அபிநயா (34), மகன் ஆத்விக் (5) ஆகியோருடன் வசித்து வந்தார்.
ஐ.டி நிறுவன ஊழியரான இவர், தனது மனைவி பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, கடந்த மே 1ம்தேதி தனது காரில் மனைவி அபிநயா, மகன் ஆத்விக், மனைவியின் தங்கை தென்னரசி (31), மாமியார் ரேணுகா (63) ஆகியோருடன் மூணாறுக்கு சுற்றுலா சென்றார்.
பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி விட்டு நேற்று மீண்டும் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது கார், திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை தீராம்பட்டி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையை கடந்த பைக் மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார், பைக் தூக்கி வீசப்பட்ட நிலையில் பைக் ஓட்டி வந்த மஞ்சம்பட்டியை சேர்ந்த ஞானபால்ராஜ் (23) படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரில் படுகாயத்துடன் இருந்த ரேணுகா மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தார். பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த மஞ்சம்பட்டியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் லியோ(35), காரில் இருந்த பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post திருச்சி அருகே பரிதாபம் பைக் மீது கார் மோதல் வாலிபர் உள்பட 2 பேர் பலி appeared first on Dinakaran.