திருச்சி: புதுக்கோட்டையில் உள்ள மதுபான குடோனில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றி கொண்டு நாமக்கல் குடோனில் இறக்குவதற்காக லாரி ஒன்று நேற்று வந்தது. லாரியை திருச்சியை சேர்ந்த டிரைவர் கனகராஜ்(48) ஓட்டி வந்தார். திருச்சி-நாமக்கல் சாலை முசிறி அருகே லாரியை ஆம்னி வேனில் பின் தொடர்ந்து 5 பேர் வந்தனர். அப்போது காரில் இருந்தபடியே 5 பேரில் ஒருவன், ஓடும் லாரியில் ஏறினான். பின்னர் லாரியில் இருந்த 7 மதுபாட்டில் பெட்டிகளை எடுத்து ஆம்னி வேனில் வந்தவர்களிடம் கொடுத்தான்.
முசிறி அரசு மருத்துவமனை அருகே டீ குடிப்பதற்காக லாரியை டிரைவர் கனகராஜ் நிறுத்தினார். அப்போது லாரியில் இருந்தவன் இறங்கி ஓடி ஆம்னி வேனில் ஏறினான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் கனகராஜ், லாரியின் பின்புறம் சென்று பார்த்தார். அப்போது லாரியில் 7 அட்டை பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து முசிறி காவல் நிலையத்துக்கு டிரைவர் கனகராஜ் தகவல் தெரிவித்தார். ஆம்னி வேன் குறித்த தகவல்களை துறையூர் காவல் நிலையத்துக்கு முசிறி போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து துறையூர் ரவுண்டானா அருகே சென்ற ஆம்னி வேனை விரட்டி சென்று துறையூர் போலீசார் பிடித்தனர். இதனால் ஆம்னி வேனை நிறுத்தி விட்டு 5 பேரும் தப்பியோடினர். போலீசார் விரட்டி சென்று ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், மதுரையை சேர்ந்த ரமேஷ்(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர். சினிமா பாணியில் ஓடும் லாரியில் மதுபாட்டில் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post திருச்சி அருகே சினிமா பாணியில் பரபரப்பு; ஓடும் லாரியில் 7 மதுபாட்டில் பெட்டிகள் துணிகர திருட்டு: காரில் இருந்தபடி ஏறி கைவரிசை appeared first on Dinakaran.