*விவசாயிகள் கோரிக்கை
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அருகே கடந்த 20 நாட்களுக்கு முன் பலத்த காற்றுடன் பெய்த தொடர் மழையால் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மேல கொண்டூர் கிராமம் உள்ளது.
இப்பகுதியில் உள்ள மக்கள் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல மின்கம்பங்கள் பழுதடைந்தும், சில மின்கம்பங்கள் முற்றிலும் கீழே சாய்ந்தும் கிடக்கின்றன. இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் மின்கம்பங்களை மட்டும் சரி செய்துள்ளனர்.
ஆனால், விவசாய நிலங்களுக்கு செல்லும் மின்கம்பங்களை நேற்று வரை சரி செய்யாத காரணத்தால் அப்பகுதி விவசாயிகள் மின் மோட்டாரை இயக்க வழி இல்லாமல் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மிகுந்த வேதனையில் உள்ளனர். மேலும் இதுகுறித்து பலமுறை மின்சார அலுவலகத்துக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர்.
இப்பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் லேசான மழையால் விவசாய விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தானியங்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பயிர்களுக்கு போதிய தண்னீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் மேல கொண்டூர் பகுதியில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருக்கோவிலூர் அருகே விளைநிலங்களில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் appeared first on Dinakaran.