தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் உலகப் பிரசித்திபெற்ற தஞ்சைப் பெரிய கோயில் உள்ள தஞ்சை மாவட்டம் பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தகைய தனிச்சிறப்புகளைக் கொண்ட தஞ்சை மாநகரில் ஜூஸ் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்மொழிப் பற்றாளர்களான சகோதரர்கள் இருவர் பற்றிய செய்திதான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அப்படி இவர்கள் என்ன செய்துவிட்டார்கள்? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது. உலகப் பொதுமறை என்று அனைவராலும் போற்றப்படும் திருக்குறள் அனைத்து மாணவர்கள் மனதிலும் ஆழப்பதிவதற்கான வேலையைதான் செய்துவருகிறார்கள். திருக் குறள் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் விதமாக ஜில்..ஜில்… கூல்.. கூல்… திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
தஞ்சை மாநகரம் பாத்திமா நகர் என்.கே.ரோடு பகுதியைச் சேர்ந்த செந்தில்நாதன், சுமதி தம்பதியின் மகன்கள் சீனிவாசன், சிவாஜிகணேசன். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாஞ்சிக்கோட்டை ரோடு பகுதியில் புளியமரத்து எஸ்.எஸ்.வாசன் சர்பத் கடை என்ற பெயரில் ஜூஸ் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த சர்பத் கடையில் சமீப காலமாக பொதுமக்கள் கூட்டத்தை விட பள்ளி மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதுகிறது. அதற்கான காரணம், இரண்டு முதல் 5 திருக்குறள் வரை ஒப்புவித்தால் ஒரு சர்பத் இலவசம், 10 திருக்குறள் ஒப்புவித்தால் ஒரு பால் சர்பத் இலவசம், 20 திருக்குறள் ஒப்புவித்தால் சாக்லெட் மில்க் ஷேக் இலவசம் என்ற அறிவிப்புதான் இதற்குக் காரணம். தினந்தோறும் காலை முதல் இரவு வரை சர்பத் குடிக்க வரும் மாணவர்கள் பணம் எதுவும் கொடுக்காமல் 5 திருக்குறளை ஒப்பித்துவிட்டு குளிர்ச்சியான சர்பத் வாங்கி குடித்துவிட்டு பள்ளிக்கு உற்சாகமாகச் செல்கின்றனர். பள்ளி மாணவர்களிடையே திருக்குறள் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த புதிய முயற்சியை சர்பத் கடை சகோதரர்கள் சீனிவாசன், சிவாஜி கணேசன் செயல்படுத்தி வருகின்றனர்.
தங்களின் ஜில்…ஜில்.. கூல்… கூல் திட்டம் பற்றி விவரிக்கையில், ‘‘அண்ணன் சீனிவாசன் தஞ்சை அருகே உள்ள பூண்டி புஷ்பம் கல்லூரியில் எம்.காம் படித்து முடித்தார். நானும் அதே கல்லூரியில் பி.பி.ஏ படித்து முடித்தேன். பின்னர், அப்பாவுக்கு உதவியாக விவசாயம் மற்றும் ஜூஸ் கடை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தோம். ஜூஸ் கடை மற்றும் விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானத்தைக்கொண்டு வாழ்ந்து வந்தோம். ஏழ்மை நிலையில் கல்வி கற்க முடியாத ஏழை மாணவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும், என்று எங்கள் தந்தை அடிக்கடி கூறுவார். அதன்படி, எங்களது வருமானத்தைக் கொண்டு படிப்புச் செலவிற்கு பணமின்றித் தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவந்தோம். அதேபோல், சுதந்திர தினம், தலைவர்கள் பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளின்போது பொதுமக்களுக்கு இலவசமாக ஜூஸ் வழங்கி வருகிறோம்.
இந்நிலையில், பள்ளி மாணவர்களிடையே தமிழ்மொழியின் மீதான ஆர்வத்்தின் நிலையை அறிந்துகொள்ள முடிவு செய்தோம். அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜூஸ் குடிக்க வந்த பள்ளி மாணவர்களிடம் திருக்குறளை ஒப்புவிக்குமாறு கூறினோம். அப்போது ஒருசில மாணவர்கள் திருக்குறளை ஒப்புவித்தனர். அவர்களைப் பாராட்டும் விதமாக இலவசமாக சர்பத் கொடுத்தோம். இதில், பெரும்பாலான மாணவர்களுக்குத் திருக்குறள் தெரியவில்லை என்பதை அறிந்து வருத்தம் அடைந்தோம்’’ என்று சீனிவாசன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘பள்ளி மாணவர்களிடையே திருக்குறள் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன்படி, சர்பத் குடிக்க வரும் மாணவர்களிடம் திருக்குறளை ஒப்புவிக்குமாறும் கூறினோம். மேலும், சரியாக கூறினால் பால் சர்பத் இலவசம் என்றோம். அதனை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் போட்டிக்கு தயாராகினர். தினமும் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பாக கடைக்கு வந்த மாணவர்கள் 5 திருக்குறளை ஒப்புவித்தனர். அவர்களுக்கு சர்பத் வழங்கி பாராட்டினோம். அதேபோல், 10 திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்குப் பால் சர்பத், 20 திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு சாக்லேட் மில்க் ஷேக் இலவசமாக வழங்கினோம். இந்த நிகழ்வு பள்ளி மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, ஏராளமான பள்ளி மாணவர்கள் திருக்குறளை அதிகாரம் வாரியாக மனப்பாடம் செய்து எங்களிடம் வந்து ஒப்புவித்தனர். பள்ளி மாணவர்கள் காலை முதல் இரவு வரை சர்பத் கடைக்கு வந்து திருக்குறள் ஒப்புவித்து வரும் சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது’’ என்று கூறிய சீனிவாசனைத் தொடர்ந்து, அவரது தம்பி சிவாஜிகணேசன் கூறுகையில், ‘‘சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் நமது சுற்றுச்சூழல் பாதுகாக்கும் பணியில் அயராது உழைத்து வரும் தூய்மைப்பணியாளர்கள், பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் இலவசமாக சர்பத் வழங்கிவருகிறோம். அதேபோல், உயிர் காக்கும் சேவையில் பொதுநலத்தோடு செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கு சர்பத் இலவசமாக வழங்கிவருவதை வாடிக்கையாக வைத்துள்ளோம்.
எங்கள் வருமானத்தில் பணத்தைச் சேமித்து கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களைக் கண்டறிந்து உதவி செய்துவருகிறோம். தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கடைக்கு வந்து எங்கள் பிள்ளை திருக்குறள் சொல்லுவான் கேளுங்கள் என்று ஆர்வத்தோடு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல், தஞ்சையில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் எங்களைத் தொடர்பு கொண்டு பாராட்டினர். மேலும், மாணவர்கள் நலனில் அக்கறையுடன் செயல்படும் எங்கள் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இதுவரை 2000க்கும் மேற்பட்ட மாணவர்களிடையே திருக்குறள் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது மனதிற்கு நிறைவாக உள்ளது’’ என்று சகோதரர்கள் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘வாழ்வியல் நூலான திருக்குறளை முழுமையாகக் கற்றால் மட்டுமே தலைசிறந்த மாணவர்கள் சமுதாயம் உருவாகும். சமீப காலமாக திருக்குறள் படிக்கும் ஆர்வம் மாணவர்களிடையே இல்லை. பெரும்பாலான மாணவர்கள் திருக்குறளை ஆழ்ந்து பொருள் உணர்ந்து படிப்பதில்லை. தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மதிப்பெண் சிந்தனையில்தான் படிக்கின்றனர். இதனால் வளமான, அறிவார்ந்த, ஒழுக்க நெறிகள் அறிந்த மனித சமுதாயம் உருவாகாத நிலை ஏற்படுகிறது. எனவே, வீட்டில் பெற்றோர்களும், பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களுக்குத் திருக்குறளைப் பயிற்றுவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் திருக்குறட்பாக்களைக் கற்று அதன் பொருள் உணர்ந்து தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வந்தால், வளமான அறிவார்ந்த மாணவர் சமுதாயம் உருவாகும்.’’ என்று இளைய சமுதாயத்தின் மீது அக்கறையோடு சகோதரர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
The post திருக்குறள் ஆர்வத்தை வளர்க்கும் சர்பத் கடை சகோதரர்கள் appeared first on Dinakaran.