சென்னை: ஆளுநரின் மாண்புகளை மீறி, இதுபோன்று திருக்குறளில் கலப்படம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 13ம் தேதி நடந்த மருத்துவ தினத்தை யொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரக்கூடிய 50 மருத்துவர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவுப்பரிசு வழங்கினார்.
இந்த கேடயத்தில் திருக்குறள் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. மேலும், அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த திருக்குறள்தான் மிகப் பெரிய பேசுபொருளாகி உள்ளது. திருக்குறளில் அப்படி ஒரு குறளே கிடையாது என்பது தமிழ் ஆர்வளர்கள் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த திருக்குறள் ஒரு போலியான திருக்குறள் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; கடந்த13ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் எழுதாத ஒரு குறளை உருவாக்கி, அதை நினைவு பரிசில் அச்சிட்டு வழங்கிய விவகாரம் தமிழ்நாட்டின் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
திருவள்ளுவருக்கு காவி அணிவதில் ஆர்வமுள்ள ஆளுநர், திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு குறளில் தவறு வந்தால் எழுத்துப் பிழை, வார்த்தை பிழை வரலாம். ஆனால், ஒரு முழு திருக்குறளையும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எழுதியிருப்பது திருக்குறளில் கலப்படம் செய்யும் நோக்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆளுநரின் மாண்புகளை மீறி, இதுபோன்று திருக்குறளில் கலப்படம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல். ஆளுநர் அவர்கள் இவ்விஷயம் குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருக்குறளில் கலப்படம் செய்வதை ஏற்க முடியாது; ஆளுநர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.