திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?

3 hours ago 3

?கோயிலில் கடவுளை வணங்கும்போது, நமது இருகைகள் இணைத்து நெஞ்சுக்கு நேராக இருக்க வேண்டுமா? தலைக்கு மேலே இருக்க வேண்டுமா?
– கே.விஸ்வநாத் பெங்களூர்.

ஆண்களின் இரு கைகளும் தலைக்குமேல் கூப்பியபடி இருக்க வேண்டும். பெண்களின் இரு கைகளும் நெஞ்சுக்கு நேராக இருக்க வேண்டும். யாரை வணங்கும் போதும், பெண்கள் கைகளைத் தலைக்குமேல் வைத்து வணங்கக் கூடாது.

?திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?
– அண்ணா. அன்பழகன். அந்தணப்பேட்டை.

சூரிய குலத்து அரசர் திரிசங்கு. அவர் உடம்போடு சொர்க்கம் போக விரும்பி, குல குருவான வசிஷ்டரிடம் சொல்லி அதற்கு உண்டானவைகளைச் செய்யச் சொன்னார். ‘‘அது சுலபமல்ல; நடக்காது’’ என அறிவுரை சொன்னார் வசிஷ்டர். அதனால் வசிஷ்டரிடம் கோபம் கொண்ட திரிசங்கு, அவரை அவமானப் படுத்தி சாபம் பெற்றார். அதன்பின் திரிசங்கு, விசுவாமித்திரரிடம் போய் நடந்ததைச் சொல்ல, அவர் தன் தவசக்தியால் திரி சங்குவை,உடலோடு சொர்க்கத்திற்கு அனுப்பினார். தேவர்களோ, “இது முறையற்ற செயல்’’ என்று சொல்லி, திரிசங்குவைக் கீழே தள்ளினார்கள். திரிசங்கு அலறியபடியே கீழே விழ, அவரை அப்படியே ஆகாயத்தில் தடுத்து நிறுத்தி, ஒரு புது சொர்க்கத்தையே உருவாக்கினார் விசுவாமித்திரர். அது `திரிசங்கு சொர்க்கம்’ எனப்படுகிறது. மேலும் இல்லாமல் கீழும் இல்லாமல், அவாந்தரமாக-அந்தரத்தில், எந்த விதமான உதவியும் இல்லாமல் இருப்பது திரிசங்கு சொர்க்கம்.

?ரசவாதம் என்பது என்ன?
– ஆர்.கே. லிங்கேசன். மேலகிருஷ்ணன்புதூர்.

இரும்பு, செம்பு, பித்தளை முதலான விலை குறைந்த உலோகங்களை, மிகவும் விலை உயர்ந்த தங்கமாக மாற்றுவது, ரசவாதம் எனப்படும். இதற்கான மூலிகைகளின் அளவு, அவற்றில் இருந்து எடுக்கப்படும் சாறு அளவு, அவற்றின் கலவை முறை உண்டான உருவேற்றப்பட்ட சித்தியான மந்திரங்கள் என அனைத்தும் அடங்கியதே ரசவாதம். பழைமையான ஞான நூல்கள், ஹாலாஸ்ய மகாத்மியம், திருவிளையாடல் புராணம், சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு, தாயுமானவ சுவாமிகள் நூல்கள் எனப் பலவும் இதைப் பற்றிச் சொல்லி, ‘‘அந்தப் பக்கம் போகாதீர்கள்!’’ என எச்சரிக்கின்றன. தயவு செய்து, யார் பேச்சையும் கேட்டு ரசவாதத்தில் சிந்தையைச் செலுத்த வேண்டாம்.

?யாமம் என்றால் என்ன? இரவின் முதல் யாமம் எது? கடைசி யாமம் எது?
– ஆர்.கே.லிங்கேசன். மேலகிருஷ்ணன்புதூர்.

இரண்டு முகூர்த்தங்கள் சேர்ந்தது அதாவது மூன்று மணி நேரம் ஒரு யாமம். பகலில் நான்கு யாமங்கள்; இரவில் நான்கு யாமங்கள். இரவில் உள்ள நான்கு யாமங்களில், மாலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை இரவின் முதல் யாமம்; இரவு மூன்று மணி முதல் விடியற்காலை ஆறுமணி வரை, கடைசி யாமம். நாள் ஒன்றுக்குப் பத்து யாமம் என்றும் சொல்வ துண்டு. அப்படிப்பார்த்தால் அதற்கு ஏற்றாற்போல், நேரத்தைக் கணக்கிட்டு்க் கொள்ள வேண்டும்.

?மனைவி மறைந்து விட்ட நிலையில், ஆண்கள் சஷ்ட்யப்த பூர்த்தி, பீமரத சாந்தி ஆகிய சடங்குகளைச் செய்யலாமா?
– ப.த.தங்கவேலு. பண்ருட்டி.

செய்து கொள்ளலாம். அவ்வாறு செய்யும் அந்த உத்தமமான சடங்குகளை, வீட்டிலோ அல்லது ஆலயங்களிலோ அல்லது நதி தீரங்களின் கரைகளிலோ, செய்வது விசேஷம்.

?வால்மீகி முனிவர் பால காண்டத்தில் ராமபிரானது 16-முக்ய குணங்களைப் பட்டியலிடுகிறாராமே! அவை யாவை?
– தளவாய். R.நாராயணசாமி, பெங்களூர்.

நற்குணங்கள் நிறைந்தவர், மனதை வசப்படுத்தியவர், தர்மவான், நன்றியறிவு உள்ளவர், உண்மையே பேசுபவர், திடமான விரதம் உள்ளவர், முன்னோர்களின் வழியை மீறாமல் நடப்பவர், எல்லா ஜீவராசிகளிடமும் இதமாக நடப்பவர், கல்வியில் மேம்பட்டவர், திறமைசாலி, அன்பான பார்வை உடையவர், தைரியசாலி, கோபத்தை வசப்படுத்தியவர், ஔி மிகுந்தவர், பொறாமை இல்லாதவர், கோபம் கொண்டால் தேவர்களும் நடுங்கும்படியான தன்மை கொண்டவர் எனும் பதினாறு குணங்களும் கொண்டவர் ஸ்ரீராமர் என வால்மீகி முனிவர் பட்டியல் இடுகிறார்.

?இடி இடிக்கும்போது, “அர்ஜுனன் தலை பத்து’’ எனப் பலமுறை கூறுகிறார்களே! அர்ஜுனனுக்கும் பத்து தலைக்கும் தொடர்பு உண்டா?
– ஆர்.நாராயணசாமி.பெங்களூர்.

தொடர்பு உண்டு. காண்டவவனத்தைக் கண்ணன் துணையோடு அர்ஜுனன் எரிக்க முயன்றபோது, தேவேந்திரன் இடி,மழை,மின்னல் ஆகியவைகளை அனுப்பி, அர்ஜுனனைத் தடுத்தார். ஆனால் அந்த இடி,மழை,மின்னல் எனும் தடைகளைத் தாண்டிக் காண்டவ வனத்தை எரித்து வெற்றி கொண்டான் அர்ஜுனன். அந்த அர்ஜுனனுக்குப் பத்துப் பெயர்கள் உண்டு. தனஞ்ஜயன், விஜயன், சுவேதவாகனன், கிரீடி, பீபத்சு, சவ்யசாசி, அர்ஜுனன், பல்குணன், ஜிஷ்ணு, பார்த்தன் எனும் அந்தப் பத்துப் பெயர்களையும் இடி இடிக்கும் போது கூறினால், அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்பதற்காகவே, அந்தப் பத்துப் பெயர்களையும் சொல்லுமுகமாக, இடி இடிக்கும் போது, ‘‘அர்ஜுனன் தலைபத்து’’ என்று கூறுகிறார்கள்.

?மனித வாழ்க்கையில் நவகிரகங்களான சூரியன் – சந்திரன் ஆகியவற்றின் பங்களிப்பு என்ன?
– ஆர்.கே.லிங்கேசன். மேலகிருஷ்ணன்புதூர்.

ஒவ்வோர் உடம்பிலும் உள்ள ஆத்மா, மனம், பலம், வாக்கு ஞானம், காமம், துயரம் முதலான அனைத்திற்கும், ஒவ்வொரு கிரகம் அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளது. இவைகளைத் தவிர எலும்பு, ரத்தம், மூளை, தோல், தசை, இந்திரியம், நரம்பு ஆகியவைகளும் நம் உடம்பில் உள்ளன. இந்த இரண்டு வகைப் பட்டவைகளிலும், சூரியன் முதலான நவகிரகங்கள் (நம் உடம்பில்) இடம் பெற்றிருக்கின்றன. அதன்படி, சூரியன் – ஆத்மாவாகவும் எலும்பாகவும் இருக்கிறது. சந்திரன் – மனமாகவும் ரத்தமாகவும் இருக்கிறது. மற்ற நவகிரகங்களுக்கும் இவ்வாறு உண்டு.

ஓர் உதாரணம்: குளுமையாக, ஔிக்கதிர்களை வீசி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டிய சந்திரன், கொதிப்பு அடைந்தால்… என்னவாகும்? நமது உடம்பில் அந்த சந்திரன் இடம் பெற்றிருக்கும் மனம் கொதிப்படைந்தால், ரத்தம் சூடேறும். பிறகென்ன? ரத்தக் கொதிப்புதான். (இது உதாரணம் மட்டுமே) அதுபோல நமக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான காரணங்களை, ஜோதிட வல்லுனர்கள் மூலம் அறிந்து அதற்கு உண்டானவற்றைச் செய்து, நன்மை பெறலாம்.

The post திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன? appeared first on Dinakaran.

Read Entire Article