
சென்னை,
திமுக நிர்வாகிகளுக்கு இடையே நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிக்காக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டிகளில் இளைஞரணி, அயலக அணி, மாணவரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.
இந்நிலையில், இந்த போட்டியில் மேயர் தலைமையிலான சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் அணியும் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கவுன்சிலர்கள் பயிற்சி மேற்கொண்டனர். சென்னை மாநிலக் கல்லூரியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தீவிர பயிற்சி மேற்கொண்டார். மேலும் பந்து வீச்சு, பேட்டிங் பயிற்சியை மேயர் தொடங்கி வைத்த நிலையில், போட்டிக்காக அந்த அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பயிற்சியை தொடங்கி வைத்த பின் மேயர் பிரியா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக ஆட்சியில் விளையாட்டுப்போட்டிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விளையாட்டுத்துறையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக கையாண்டு வருகிறார் என்றார்.