சென்னை: “நாம் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக இருக்கிறது. இவர்களுக்குள் மோதல் வராதா? பகையை வளர்க்க முடியாதா என்று வேதனையில் பொய்களைப் பரப்பி, அற்பத்தனமான காரியங்களைச் செய்து, தற்காலிகமாக சந்தோஷம் அடைந்து கொள்கிறார்கள். அவர்கள் கனவு எப்போதும் பலிக்காது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற திமுக பவள விழாப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “எல்லோரும் சொன்னார்கள்… நம்முடைய கூட்டணி அமைந்த பிறகு, தமிழகத்தில் நடந்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால், நம்முடைய கூட்டணி கொள்கைக் கூட்டணி மட்டும் அல்ல; வெற்றிக் கூட்டணி. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்துதான் அகில இந்திய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கான இந்தியா கூட்டணியே அமைக்கப்பட்டது. சில கட்சிகள் உருவாக்கும் கூட்டணிகள், தேர்தல் நேரத்தில் உருவாகி, தேர்தல் முடிந்ததும் கலைந்துவிடும். ஆனால் நம்முடைய கூட்டணி அப்படி அல்ல.