சென்னை: “இன்னும் சில மாதங்களில் கூட்டணி தொடர்பான விவாதங்கள் தீவிரமடையும். அப்போது திமுக கூட்டணியில் பிளவினை ஏற்படுத்த வேண்டு்ம் என்பதே அவர்களின் நிலைப்பாடு. அதற்கு விசிகவைத் துருப்புச் சீட்டாக ஆக்க பார்க்கிறார்கள்.” என்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் தொண்டர்களை எச்சரித்துள்ளார். மேலும் அரசியல் தொடர்பான விவாதங்களில் தலைமையின் கருத்தை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் முகநூல் நேரலையில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: எல்லோரும் தேர்தலுக்காக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் பாஜக பாசிச அரசு மெல்ல மெல்ல சாதுரியமாக காய்களை நகர்த்தி புரட்சியாளர் அம்பேத்கரால் வகுத்தளிக்கப்பட்ட அரசியமைப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிற அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள் இதனை நாம் அமைதியாக வேடிக்கை பார்த்த முடியாது.