சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவையாறு துரை.சந்திரசேகரன்(திமுக) பேசுகையில் “திருவையாறு தொகுதி, வீரசிங்கம்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயிலுக்கு திருப்பணி செய்ய அரசு முன்வருமா? என்றார்.
இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், “உறுப்பினர் கோரிய அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். அந்த திருக்கோயிலில் மட்டும் 276 சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் திருப்பணிக்கு சுமார் 1.50 கோடி செலவில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அந்த திருக்கோயிலில் போதிய நிதி இல்லை. 2012ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அரசின் சார்பில் திருக்கோயில் திருப்பணிக்காக வழங்கப்படுகின்ற நிதி ஆறு கோடி ரூபாயை இந்த ஆண்டு தமிழக முதல்வர் 10 கோடி ரூபாயாக உயர்த்தி கொடுத்து இருக்கின்றார். ஆகவே அந்த நிதியிலிருந்து அருள்மிகு வைத்தியநாத சாமி திருக்கோயில் திருப்பணி மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
துரை.சந்திரசேகரன்:திருவையாறு தொகுதியில் எல்லா கோயில்களிலும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்ற வேளையில் தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டதை போல இந்த வைத்தியநாத சுவாமி கோயில் மிகப் பழமை வாய்ந்த கோயில் ஆகும். வருமானம் இல்லாத அந்த கோயிலுக்கு குடமுழுக்கு செய்யப்படும் அமைச்சர் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோல கடுவெளியில் சித்தர் வாழ்ந்த ஊரான ஆகாச பிரகதீஸ்வரர் கோயிலும், திருவேந்தகுடி வேதபுரீஸ்வரர் ஆலயமும் திருப்பணி செய்யாமல் இருக்கின்றன. அதையும் இந்த ஆண்டு குடமுழுக்கு செய்ய அரசு முன் வருமா?
அமைச்சர் பி.கே.சேகர்பாபு: உறுப்பினர் கோரி இருக்கின்ற அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் என்பது கடுவெளி சித்தர் வழிபட்ட திருக்கோயில். இந்த திருக்கோயிலும் போதிய வருமானம் இல்லாததால் தமிழக முதல்வரால் வழங்கப்பட்டு இருக்கின்ற திருப்பணி நிதி ரூ.10 கோடியிலிருந்து இந்த திருக்கோயில் திருப்பணியும் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும். அதேபோல் அவர் கூறிய மற்றொரு கோயிலான மாரியம்மன் திருக்கோயிலின் திருப்பணியும் இந்த ஆண்டு மேற்கொள்வதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு தமிழக முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்று நடைபெறும் 9 திருக்கோயில்களின் குடமுழுக்கையும் சேர்த்து இதுவரை ஒன்பது திருக்கோயில் குடமுழுக்கு நடந்து கொண்டிருக்கின்றன இதுவரையில் திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு 2,857 திருக்கோயிலில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று முடிந்திருக்கிறது’’ என்றார்.
The post திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு 2,857 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்து முடிந்துள்ளது: சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.