திமிரி அருகே தினந்தோறும் மக்கள் அச்சம் வீட்டின் மாடியில் ராட்சத விஷ குளவி கூடு

3 weeks ago 6

*தீயிட்டு அழிக்க டிஎஸ்பியிடம் புகார் மனு

கலவை : திமிரி அருகே வீட்டின் மாடியில் ராட்சத விஷ குளவி கூடு கட்டியுள்ளதை அழிக்க வேண்டும் என்று டிஎஸ்பியிடம் அப்பகுதி மக்கள் புகார் மனுஅளித்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை அடுத்த பொன்னம்பலம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் விஷ குளவிகள் கூடு கட்டி இருந்தது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி அந்த விவசாய நிலத்தில் விவசாயி ஒருவர் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அந்த விஷ குளவிகள் அவரை கொட்டியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மூட்டி அந்த விஷ குளவி கூட்டை அழித்தனர்.

இந்நிலையில் திமிரி அருகே மருத்துவம்பாடி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் பெரிய ராட்சத விஷ குளவி கூடு உள்ளது. இந்த கூட்டில் ஆயிரக்கணக்கான குளவிகள் உள்ளது. இந்த விஷ குளவிகளால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்று தினந்தோறும் அங்குள்ள மக்கள் போர்வையை போர்த்தியபடியே அச்சத்துடனே செல்கின்றனர். மேலும் விஷ குளவிக்கு பயந்து மக்கள் வீட்டில் உள்ள ஜன்னல், கதவுகளை மூடியே உள்ளனர்.

பல நேரங்களில் வீட்டிற்குள்ளேயே மக்கள் முடங்கிவிடுகின்றனர். இதனால் பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு கட்டியுள்ள ராட்சத விஷ குளவி கூட்டை அழிக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் திமிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமியிடம் கடந்த 15ம் தேதி புகார் மனு அளித்தனர். ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் அப்பகுதியை சேர்ந்வர்கள் ராணிப்பேட்டை மாவட்ட டிஎஸ்பி திருமாலிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், மருத்துவம்பாடி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள விஷ குளவிகள் பெரிய ராட்சத கூடு கட்டியுள்ளது. இந்த கூட்டால் உயிர் சேதம் ஏற்படும் முன் அவற்றை உடனடியாக நடவடிக்கை எடுத்து அழிக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனுவை பெற்று கொண்ட டிஎஸ்பி திருமால், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

The post திமிரி அருகே தினந்தோறும் மக்கள் அச்சம் வீட்டின் மாடியில் ராட்சத விஷ குளவி கூடு appeared first on Dinakaran.

Read Entire Article