கேரளாவிற்கு அடுத்ததாக தமிழ்நாட்டில்தான் அதிகளவில் தென்னை சாகுபடி நடக்கிறது. குறிப்பாக சேலம், தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் திரும்பும் திசையெங்கும் தென்னந்தோப்புகள் வீற்றிருக்கும். இந்தத் தென்னந்தோப்புகளில் பலர் பலவிதமான ஊடுபயிர்களை சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த கிருபாகரன் என்பவர் தென்னையை சாகுபடி செய்து அதில் மிளகு, மகோகனி, பலா உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் அவரைச் சந்தித்துப் பேசினோம். ‘டீச்சர் ட்ரைனிங் படித்துவிட்டு, உத்தமசோழபுரம் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தேன். பின்பு விவசாயத்தின் மேல் இருந்த நாட்டத்தால் வேலையை விட்டுவிட்டு முழுவதுமாக விவசாயத்தில் இறங்கினேன். தற்போது எனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் குட்டை நெட்டை ரக தென்னையை சாகுபடி செய்திருக்கிறேன். ஒரு ஏக்கருக்கு 75 தென்னை மரங்கள் என்ற கணக்கில் நடவு செய்தேன். 26 ×27 என்ற கணக்கில் ஒவ்வொரு கன்றுகளையும் நடவு செய்தேன். தென்னங்கன்றில் உள்ள தேங்காயின் அளவைப் பொறுத்து குழியை எடுத்து நடவு செய்தேன். அவ்வாறாக நடவு செய்யும் தென்னங்கன்றுகளை தேங்காய் மூடும் அளவுக்கு மட்டும் மண்ணைப் போட்டு மூடுவோம். தேங்காயின் தண்டுகள் இருக்கும் அளவுக்கு மண்ணை ஏற்றமாட்டேன்.
தேங்காயின் தண்டு மூடும் அளவிற்கு மண் கொட்டினால் மரத்தின் வளர்ச்சிக்காலம் தாமதம் ஆகும். தென்னங்கன்றைச் சுற்றி 3 அடி நீளம், 3 அடி அகலம், ஆழம் கொண்ட பாத்திகள் அமைத்து அதில் இயற்கையான கால்நடைகளின் எருவை சேர்த்து ஈரப்பதத்திற்கு ஏற்றவாறு தேவையான அளவு தண்ணீர் விடுவேன். இந்த மரங்களை வைத்து கிட்டதட்ட 20 வருடங்களுக்கு மேலாகிறது.அரசு வழங்கிய சொட்டுநீர்ப் பாசன அமைப்பு மூலம் தென்னைகளுக்கு தண்ணீர் விட்டு வருகிறேன். இதன்மூலம் நிலம் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது. மரத்திற்கும் ஒரே சீரான இடைவெளியில் தண்ணீர் பாய்கிறது. இதுபோக 3 நாட்களுக்கு ஒருமுறை வாய்க்கால் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவேன். தென்னையில் கூன்வண்டுகளின் தாக்குதல் அதிகம் இருக்கும். கூன்வண்டுகளைக் கட்டுப்படுத்த ஆமணக்குக் கொட்டையை அரைத்து, அதனை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைப்போம். பிறகு இந்தத் தண்ணீரை ஒரு சிறிய பானையில் ஊற்றி நிலத்தில் ஆங்காங்கே பதித்து வைத்துவிடுவேன். இதன் வாசத்திற்கு வண்டுகள் அனைத்தும் வந்து பானையில் விழுந்துவிடும்.கன்று நடவு செய்த 5 வது வருடத்தில் இருந்து இளநீர் காய்க்கத் தொடங்கியது. போரான் சத்து சரியாக இருந்தால் வரிகள் இல்லாத வழுக்கை இளநீர் கிடைக்கும். நான் தேங்காயாக விற்காமல் இளநீராக மட்டுமே விற்பனை செய்கிறேன். வியாபாரிகள் நேரடியாக வந்து மரத்தில் ஏறி தென்னங்குலைகளை வெட்டி எடுத்துச் செல்கிறார்கள். 50 நாட்களுக்கு ஒருமுறை ஒரு அறுப்பு இருக்கும். சராசரியாக ஒரு தென்னை மரத்தில் இருந்து ஒரு ஆண்டுக்கு ரூ.3500 வருமானமாக கிடைக்கிறது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு ரூ.3.37லட்சம் கிடைக்கிறது. இதில் 10 சதவீதம் செலவு ஆகும். அதாவது ரூ.33 ஆயிரம் செலவு போக ரூ.3 லட்சம் லாபமாக கிடைக்கிறது.
தென்னையில் ஊடுபயிராக 500 மகோகனி மரங்கள், 200 வியட்நாம் இயர்லி பலா மரங்கள் வைத்திருக்கிறேன். இதுபோக தென்னையில் ஊடுபயிராக குத்து மிளகினை நடவு செய்திருக்கிறேன். இவை திப்பிலியில் ஒட்டு கட்டப்பட்ட மிளகுச்செடிகள். இன்னும் மூன்று மாதத்தில் இதில் இருந்து நல்ல மகசூல் கிடைக்கும். மற்ற கொடி மிளகு ரகங்களைப் போல் இல்லாமல், இந்த திப்பிலியில் ஒட்டுக்கட்டப்பட்ட மிளகுச்செடி 5 அடி உயரம் மட்டுமே வளரும். இதில் நாம் எளிதாக கீழே நின்றவாறே அறுவடை செய்யலாம். இதன்மூலமும் ஒரு நல்ல வருமானம் கிடைக்கும்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
கிருபாகரன் – 93447 48435
The post திப்பிலியில் ஒட்டு கட்டிய குத்துமிளகு appeared first on Dinakaran.