திண்டுக்கல் – குமரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலங்கள்: சர்வீஸ் சாலை பணிகள் துவக்கம்

3 hours ago 3

மதுரை, மே 15: திண்டுக்கல் – குமரி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மேம்பாலங்கள் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளன. சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், மதுரை அலகின் கட்டுப்பாட்டின் கீழ். திண்டுக்கல் முதல் கோவில்பட்டி வரையிலும், மதுரை முதல் நத்தம் வரையிலும், மேலூர் முதல் காரைக்குடி வரையிலும், திருமங்கலம் முதல் விருதுநகர் மாவட்டம், அழகாபுரி வரையிலும், மதுரை வெளிவட்ட சாலை முழுவதும் என, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் 315 கி.மீ தூர சாலைகள் பராமரிக்கப்படுகின்றன.

இச்சாலை ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் ஒரு முறை அதிகம் விபத்துக்கள் நடந்த இடங்களில், அவற்றில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து, அங்கு பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, கோச்சடை அடுத்த துவரிமான் சந்திப்பில் ரூ.46 கோடியிலும், தனக்கன்குளத்தில் ரூ.43 கோடியிலும் ஆறு வழிச்சாலையுடன் கூடிய இரு மேம்பாலங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கடந்த மாதம் பூமி பூஜை போடப்பட்டது.

தொடர்ந்து, இரண்டு இடங்களிலும் மேம்பாலம் கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கும் பணிகள் துவங்கி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதேநேரம், பால பணிகளை மேற்கொள்ளும்போது சாலையில் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க முதற்கட்டமாக துவரிமான் மற்றும் தனக்கன்குளம் ஆகிய இடங்களில் பிரதான சாலைகளோரம் சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் அதில், திருப்பிவிடப்பட்ட பின் சாலையின் மைய பகுதியில் புதிய மேம்பாலங்கள் கட்டும் பணிகள் துவங்கும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post திண்டுக்கல் – குமரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலங்கள்: சர்வீஸ் சாலை பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article