திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே நடந்த வரலாற்று குழு ஆய்வில் 12ம் நூற்றாண்டு வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே அழகுபட்டி மாலைகோவில்பட்டி பகுதியில் வரலாற்று குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், வரலாற்று மாணவர் ரத்தினமுரளிதர், வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன், பெருமாள் சாமி அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 12ம் நூற்றாண்டை சேர்ந்த வீரன் நடுகல் கண்டுபிடித்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
இவ்வூரின் கடைசி ஓடையின் அருகே வீரன் மற்றும் அவரது மனைவியின் நடுகல் உள்ளது. வீரனின் வலது கையில் வாள் மார்பின் குறுக்கே நீட்டிய நிலையில் உள்ளது. வீரனின் இருகைகளில் கங்கணமும், தோளில் லாகு வளையமும், தலையில் கரண்ட மகுடம் போன்ற தலைபா கட்டும், அதில் கழுத்தின் பின்புறமும் உத்திரியம் பறப்பது போலவும், இடையில் கச்சையும் அதில் இடைகச்சையணி வேலைப்பாட்டுடன் தொங்குவதும், கால்களில் தண்டையும் என வீரனின் செய்கை போரில் இறந்து விட்டதை குறிக்கிறது.
பெண்ணின் முகம் வீரனை பார்த்தபடியும், கொண்டை சரிந்தும், கைத்தோள் வளையும், காதில் வளையமும், மார்பு கச்சையும் அணிந்தபடி நெஞ்சில் ஆரமும், இடது கை மார்பிற்கு கீழ் மது குடுவையும், வலது கையில் வளரி போன்ற ஆயுதமும் உள்ளதால் இவ்வீரனின் மனைவியும் யுத்த வீராங்கனையாக இருப்பார். வீரன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறியிருப்பார். இருவரின் தலைக்கும் மேல் சூரியன், சந்திரன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்நடுகல் ஒரு சிறிய கல்லடுக்கில் உள்ளது. கல்லடுக்கின் மேல் உள்ள பலகை கல் இரண்டில் தொல் தமிழர் நினைவிடங்களில் உள்ள பல்லாங்குழிகள் நிறைய உள்ளன. நடுகல்லின் காலம் 12ம் நூற்றாண்டு சேர்ந்ததாகும்.உலகம்பட்டியடுத்து மாங்கரை ஆற்று கரையில் மோலையன் கொட்டத்தில் விநாயகர், நந்தி சிலைகள் உள்ளன.
விநாயகர் சிற்பம் நான்கு கைகளும், அதில் மோதகம், தந்தம் செண்டும், இரு காதுகள் நன்கு விரிந்த நிலையிலும், துதிக்கை இடது புறம் சுருண்ட நிலையிலும், மார்பில் முப்புரி நூல் உள்ளது. திண்டுக்கல் பகுதியில் காலத்தால் முற்பட்ட விநாயகர் சிலை இதுவாகதான் இருக்கும். இச்சிற்பம் ஒரு பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக உள்ளது.
நந்தி சிற்பத்தின் காதுகள் நீள் வடிவிலும் கழுத்தில் திரிசரடணியும் சரடணியின் கீழ் சலங்கை சரடுடன் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. விநாயகர் நந்தி சிற்பங்கள் பாண்டியர் கால சிற்றுரான அகரம் சிவன் கோயிலின் சிற்பங்களாக இருக்கும்.
இதனருகில் உள்ள கிராமம் அழகர்சிங்கப்பட்டியில் ஊரில் உள்ள ஒரு கிணற்றின் உள் சுவற்றில் இரட்டை மீன் சின்னம் பதிக்கப்பட்டு உள்ளது. இக்கிணறு பாண்டிய சின்னமான இரட்டை மீனை அல்லது வளமையை குறிப்பதா என தெளிவுபடுத்தப்படவில்லை. இவ்வாறு தெரிவித்தனர்.
The post திண்டுக்கல் அருகே 12ம் நூற்றாண்டு வீரன் நடுகல் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.