*புதிய பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
திண்டிவனம் : திண்டிவனம் 26-வது வார்டு நாகலாபுரம் மற்றும் 29 வது வார்டு கிடங்கல் 1 பகுதிகளில் ஏரியின் உபரி நீர் செல்லும் வாய்க்கால் உள்ளது. இதில் ஒரு தரைப்பாலம் 2 சிறிய பாலங்கள் இருந்தன. இந்நிலையில் பெஞ்சல் புயல் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கிடங்கல் 1 மற்றும் நாகலாபுரம் தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்தது.
எனினும் புதிய பாலம் கட்டப்படாததால், நாகலாபுரம் பகுதியில் உடைந்து போன பாலத்தில் ஆபத்தான முறையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடந்து செல்வதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் 5 பள்ளிகளுக்கு செல்ல இந்த பாலம் பிரதான வழி என்பதால் தற்போது மாணவர்கள் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பல மாணவர்கள் ஆபத்தான முறையில் பாலத்தை தாண்டி குதித்து செல்கின்றனர்.
இதனால் மாணவர்களின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் புதிய பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திண்டிவனத்தில் அவலம் உடைந்த பாலத்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம் appeared first on Dinakaran.