திடீர் மழையால் விவசாயிகள் அடைந்துள்ள நஷ்டத்திற்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் - ஜி.கே. வாசன்

7 hours ago 1

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் அடைந்துள்ள நஷ்டத்திற்கு ஈடாக நிவாரணத்தொகையை தமிழக அரசு கணக்கெடுப்பு நடத்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 5, 6 நாட்களாக பெய்த திடீர் மழையால் விவசாயத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டப்பகுதிகளில் பெய்த கன மழையால் வாழை, எள், வெற்றிலை மற்றும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் நனைந்து சேதமடைந்தன.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. தஞ்சை மாவட்டப் பகுதிகளில் மட்டும் சுமார் 5000 நெல்மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணாகிவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், தியாகராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நடவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. இப்பதிப்புக்கு முறையான கால்வாய் வசதி இல்லாததும் ஒரு காரணம் என்று விவசாயிகள் குறை கூறுகின்றனர்.

மேலும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் முறையாகப் பாதுகாக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்ததால் மழை நீரில் சேதமுற்றன. எனவே தமிழக அரசு நெற் பயிர்களை கிராம வாரியாக வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு செய்து, சேதமடைந்துள்ள நெற் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும். அதே போல 750 ஏக்கரில் எள் பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், எள் சாகுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

எள் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேரறுந்து வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ள எள் சாகுபடியை கணக்கெடுப்பு செய்து ஏக்கருக்கு குறைந்த பட்சம் ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் உளுந்து 80 ஏக்கரிலும், பாபநாசம், அம்மாபேட்டை, திருவிடைமருதூர் ஆகிய வட்டாரங்களில் ஏறத்தாழ 300 ஏக்கரில் பருத்தியும் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 300 ஏக்கரில் பயிர்களைத் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். எனவே தமிழக அரசு கடந்த சில நாட்களாக பெய்த திடீர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பயிர்களையும் கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article