![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/24/35517903-tmalai33.webp)
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி பெஞ்ஜல் புயல் காரணமாக கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அண்ணாமலையார் மலை அடிவாரத்தில் உள்ள திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஒரு வீட்டில் இருந்த 5 குழந்தைகள் உள்பட 7 பேர் மண், பாறைகளில் சிக்கி மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகில் மலையில் இருந்து மண் சரிவின் போது உருண்டு வந்த சுமார் 40 டன் எடை கொண்ட பாறை ஒன்று அபாயகரமான நிலையில் குடியிருப்பு பகுதியில் அருகில் நின்றது. இந்தப் பாறையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் வல்லுநர்கள் குழுவின் ஆய்வுகளுக்கு பின்னர் திருச்சியில் இருந்து பாறை உடைக்கும் வல்லுநர்கள் சுமார் 4 பேர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலையில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் அபாயகரமான நிலையில் நிற்கும் 40 டன் எடை கொண்ட பாறை மட்டுமின்றி மண் சரிவின் போது வ.உ.சி. நகர் பகுதியில் மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகளையும் அகற்றும் பணியில் 3-வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். பாறை துளைகளில் திரவ எரிபொருளை ஊற்றிய குழுவினர் இன்று மாலைக்குள் 40 டன் எடை கொண்ட பாறை வெடிக்கும் என தெரிவித்துள்ளனர். 40 டன் எடை கொண்ட பாறையை உடைத்து அகற்றும்போது கற்கள் உருண்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லாமல் இருக்க தடுப்புகளும் அப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது.