சென்னை: தி.நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது. காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் கடையில் இருந்து அலறி அடித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின் வர்த்தக பகுதியாக தி.நகர் ரெங்கநாதன் தெரு இயங்கி வருகிறது. மாம்பலம் ரயில் நிலையம் மற்றும் தி.நகர் பேருந்து நிலையம் அருகே உள்ளதால் எப்போதும் ரெங்கநாதன் ெதருவில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட ரெங்கநாதன் தெருவில் இன்று காலை முதல் கூட்டம் இருந்தது.
இந்நிலையில் ரெங்கநாதன் தெருவில் ‘சோபா ஆடையகம்’ என்ற பெயரில் துணிக்கடை உள்ளது. பெண்களுக்கான பிரத்தியேகமான கடை என்பதால் எப்போதும் இந்த கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும். வழக்கம் போல் இன்று காலை ஊழியர்கள் பணிக்கு வந்தனர். பொதுமக்களும் கணிசமாக கடையில் துணிகளை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. துணிக்கடை என்பதால் தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. அப்போது கடையில் பணியில் இருந்து ஊழியர்கள் மற்றும் துணி எடுக்க வந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
தீ விபத்து குறித்து உடனே கடையின் ஊழியர்கள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி தி.நகர். தேனாம்பேட்டை, அசோக் நகர் பகுதியில் இருந்து விரைந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் கடையில் இருந்து துணிகள் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காட்சியளித்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த விபத்து ஏற்பட்டவில்லை. இருந்தாலும், மாம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரெங்கநாதன் தெருவின் இரண்டு முனைகளிலும் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் செல்லாதப்படி தடுத்து நிறுத்தினர். இந்த தீ விபத்தில் அருகில் உள்ள கடைகளில் தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தடுத்தனர். இதனால் ரெங்கநாதன் தெருவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இருந்தாலும் தீ விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து காரணமாக ரெங்கநாதன் தெருவில் சிறிது நேரம் அனைத்து கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டது. காலையில் இந்த தீ விபத்து நடந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post தி.நகர் ரெங்கநாதன் தெருவில் சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து: ஊழியர்கள் அலறி அடித்து வெளியேறியதால் பரபரப்பு appeared first on Dinakaran.