பெரம்பலூர்: தஞ்சாவூர் விமானப்படை தளம் 8, விமானங்கள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை இணைக்கப்பட்ட நிரந்தர விமானப்படை தளமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2013 முதல் சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமான பயிற்சிகள் இங்கு நடைபெற்று வருகின்றன. கடற்கொள்ளை, பயங்கரவாத அச்சுறுத்தலை எந்தநேரமும் எதிர்கொள்ள ஏதுவாக தஞ்சாவூர் விமான படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை 11.30 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை மற்றும் பெரம்பலூர் தாலுகா பகுதிகளில், வி.களத்தூர், பசும்பலூர், எசனை, குரும்பலூர் பாளையம், ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 4 பயிற்சி விமானங்கள் இரட்டை ஜோடியாக வானில் வட்டமடித்து பறந்தன.
இவை குறிப்பாக பசும்பலூர், பிம்பலூர், வி.களத்தூர் பகுதிகளில் எங்கோ ஒரு விளையாட்டு மைதானத்தில் தரை இறங்குவது போல் அடிக்கடி தாழ்வாக பறந்து சென்றதால் தரையிறங்க உள்ளதா அல்லது தவறுதலாக விழப்போகிறதா என்பது தெரியாமல் விமானங்களின் சத்தத்தால் பொதுமக்கள் அச்சமுற்று வீடுகளை விட்டு வெளியே வந்து வானத்தை பார்த்து கொண்டிருந்தனர். இதேபோல், ஈரோடு மாவட்டம், சென்னிமலை வழியாக நேற்று காலை 9 மணி அளவில் 2 விமானங்கள், மேற்கிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி காதை பிளக்கும் சத்தத்துடன் தாழ்வாகவும், அதிவேகமாகவும் சென்றது. இதனை சென்னிமலையில் வீடு மற்றும் கடைகளில் இருந்த பொதுமக்கள் அச்சத்துடன் ஓடி வந்து பார்த்தனர். மீண்டும் காலை 10.50 மணியளவில் கிழக்கிலிருந்து, வடமேற்கு திசையை நோக்கி அதே 2 விமானங்களும் மிக தாழ்வாக அதிக சத்தத்துடன் சென்றது.
The post தாழ்வாக பறந்த போர் விமானங்கள் பெரம்பலூர்,ஈரோட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.