தாளவாடி அருகே விமர்சையாக நடந்த சாணியடி திருவிழா

2 months ago 14

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்து அடுத்துவரும் 3-வது நாள் சாணியடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. இதற்காக கிராமத்தில் உள்ள அனைத்து பசு மாட்டு சாணங்களும் சேகரிக்கப்பட்டு கோவிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து சாமி போன்ற வேடமணிந்தவரை கழுதை மீது அமர வைத்து ஊர் குளத்தில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அங்கு பீரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆண்கள் மேலாடை அணியாமல் கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இதைத்தொடர்ந்து கோவில் பின்புறம் குவித்து வைக்கப்பட்டுள்ள சாணத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அங்கு திரண்டு இருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குவித்து வைக்கப்பட்ட சாணத்தை எடுத்து உருண்டையாக உருட்டினர். பிறகு ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசி எறிந்து மகிழ்ந்தனர். இந்த வினோத திருவிழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர். இதனை அங்கு கூடியிருந்த பெண்கள், ஆர்வத்துடன் பார்த்து கைதட்டி உற்சாகப்படுத்தி ரசித்தனர்.

பிறகு பக்தர்கள் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனர். சாணத்தை உடலில் பூசுவதன் மூலம் உடலில் உள்ள நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தொடர்ந்து பக்தர்கள் வீசி எறிந்த சாணத்தை விவசாயிகள் எடுத்து சென்று தங்கள் விளைநிலங்களில் தூவினர். இவ்வாறு தூவினால் தங்கள் விவசாய நிலங்களில் பயிர்கள் நன்றாக வளரும் என்பது நம்பிக்கை ஆகும்.

#JUSTIN || ஒருவர் மீது ஒருவர் சாணி அடிக்கும் விநோத திருவிழா - ஈரோட்டில் கோலாகலம் | Erode | Festival#erode | #festival | #thanthitv pic.twitter.com/G9yttU5M6a

— Thanthi TV (@ThanthiTV) November 3, 2024
Read Entire Article