தாலியை கழற்றி வீசிவிட்டு புதுப்பெண் ஓட்டம் சேத்துப்பட்டு அருகே பரபரப்பு திருமணமான 3வது நாளில் அதிர்ச்சி

2 months ago 9

சேத்துப்பட்டு, டிச.17: சேத்துப்பட்டு அருகே திருமணமான 3வது நாளில் தாலியை கழற்றி வீசிவிட்டு புதுப்பெண் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, சென்னை வண்டலூரை சேர்ந்த கார் டிரைவருக்கு பெண் கேட்டு வந்துள்ளனர். பின்னர், இருவீட்டாரும் பங்கேற்ற பெண் வீடு மற்றும் பிள்ளை வீடு பார்க்கும் நிகழ்வும் நடந்துள்ளது. ஆனால், பெண் பார்க்க வந்த சென்னை வாலிபருக்கு மது பழக்கம் உள்ளதாக தெரிய வந்ததால் திருமணம் செய்து கொடுக்க பெண்ணின் பெற்றோர் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, அதே கிராமத்தை சேர்ந்த வாலிபருடன் இளம்பெண்ணுக்கு கடந்த 12ம் தேதி படவேடு கோயில் அருகே இருவீட்டார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. இதையறிந்த சென்னை வாலிபரின் குடும்பத்தினர், எங்களது மகனுக்கு பேசிய பெண்ணை வேறு ஒருவருக்கு எப்படி திருமணம் செய்து வைக்கலாம் என செல்போனில் மிரட்டி வந்தார்களாம். மேலும், இளம்பெண்ணிடம் அன்பாக பேசி அவரது மனதை மாற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை சென்னை வாலிபர் இளம்பெண்ணின் கிராமத்திற்கு வந்து அவரை காரில் அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, இளம்பெண் தனது கணவர் கட்டிய தாலியை கழற்றி ஜன்னல் வழியாக வீசி எறிந்து விட்டு சென்றுள்ளார். இத்தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் சென்னை வாலிபரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஆனால், அவர்கள் தங்களது எதுவும் தெரியாது என கூறிவிட்டார்களாம். இதையடுத்து, இளம்பெண்ணின் பெற்றோர் சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தனர். அதில், தனது மகளை மீட்டுத்தர வேண்டும். அவரை மிரட்டி கடத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்- இன்ஸ்பெக்டர் நாராயணன் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆன 3வது நாளில் இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தாலியை கழற்றி வீசிவிட்டு புதுப்பெண் ஓட்டம் சேத்துப்பட்டு அருகே பரபரப்பு திருமணமான 3வது நாளில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article