தாலி கட்டும் நேரத்தில் மாயமான காதலனை கரம்பிடிக்க காதலி போராட்டம்: திருத்தணியில் பரபரப்பு

2 months ago 18

திருத்தணி: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனிப்பேட்டையை சேர்ந்த கோவிந்தசாமி (ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்). இவரது மகன் ஸ்ரீதர்(29). பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பெங்களூரைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் அனுசியா(29) பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு குடும்பத்தினரும் இணைந்து காதல் ஜோடிக்கு முறைப்படி திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, திருத்தணியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 15ம் தேதி திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்நிலையில், தாலி கட்டவிருந்த நேரத்தில் மணமகன் ஸ்ரீதர் திருமண மண்டபத்திலிருந்து மாயமானார். இந்த சம்பவம் மணமகள் வீட்டாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சாதியை காரணம் காட்டி மணமகன் ஸ்ரீதர் மாயமானதாக அனுசியா காவல் நிலைத்தில் புகார் அளித்தார்.

அனுசியா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருத்தணி போலீசார் மாயமான ஸ்ரீதரை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் தங்கியிருந்த ஸ்ரீதரை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து திருத்தணிக்கு அழைத்து வந்தனர். டிஎஸ்பி கந்தன் முன்னிலையில் ஸ்ரீதர் மற்றும் அனுசுயாவுக்கு ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனர். இதனையடுத்து, போலீசார் இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அனுசியாவை திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாத ஸ்ரீதர் மறுநாளே மீண்டும் மாயமானது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, நேற்று மீண்டும் டிஎஸ்பி அலுவலகம் வந்த அனுசியா தனக்கு நீதி கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஎஸ்பி கந்தனிடம் கேட்டுக் கொண்டார். காதலுடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மறுத்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். காதலனை திருமணம் செய்ய இளம்பெண் 16 நாட்களாக போராடி வரும் சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தாலி கட்டும் நேரத்தில் மாயமான காதலனை கரம்பிடிக்க காதலி போராட்டம்: திருத்தணியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article