அமராவதி: தாய்மொழியே சிறந்தது, தாய்மொழியில் பயின்றவர்களே உலகளவில் மிகப் பெரிய சாதனைகளை படைத்துள்ளனர் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். நமது நாட்டில் இப்போது மொழி கொள்கை குறித்தே விவாதம் நடந்து வருகிறது. திமுக உள்ளிட்ட தமிழ்நாடு அரசியல் கட்சிகள் இரு மொழி கொள்கையே போதும் என்றும் மும்மொழி கொள்கை தேவையில்லை என்றும் கூறி வருகிறது. அதேநேரம் பாஜக உள்ளிட்ட கட்சிகள் மும்மொழி கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மும்மொழி கொள்கை தொடர்பாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆந்திரா சட்டப்பேரவையில் பேசிய அவர், தாய்மொழியே சிறந்தது. உலகளவில் தங்கள் தாய்மொழியில் படித்து வெற்றி பெற்றவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றனர். மொழிகள் வெறுப்புக்குக் காரணமாக இருக்கக்கூடாது. நமது தாய்மொழி தெலுங்கு, இந்தி நமது தேசிய மொழி, ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி. நமது மக்கள் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் செல்கிறார்கள்.
தேவைப்பட்டால், அந்த நாடுகளில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வது எளிதாகும் வகையில், அந்த மொழிகளை முன்கூட்டியே கற்றுக்கொள்ள வேண்டும். பிற மொழிகளைக் கற்கும் போது நம் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது. டெல்லிக்குச் சென்றால், இந்தி தெரிந்தால் தொடர்பு எளிதாகும். பல மொழிகளைக் கற்றுக்கொள்வது வேலைவாய்ப்புக்கு நன்மை பயக்கும். இந்தப் பிரச்சினையில் தேவையற்ற அரசியலில் ஈடுபடுவது சரியல்ல எனத் தெரிவித்துள்ளார்.
The post தாய்மொழியே சிறந்தது, தாய்மொழியில் பயின்றவர்களே உலகளவில் மிகப் பெரிய சாதனைகளை படைத்துள்ளனர்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து! appeared first on Dinakaran.