
நெல்லை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜேக்கப் சுதன். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஞானசெல்வம். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மகன் ஜெபராஜ், தந்தை ஜேக்கப் சுதனுடன் தூத்துக்குடி மாவட்டம் வைரவம் கிராமத்தில் வசித்து வரும்நிலையில், தாய் ஞானசெல்வத்துடன் அவரது மகள் பெட்டைகுளத்தில் வசித்து வந்தார்.
அவரது மகள், இடையன்குடி அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனை தாய் ஞானசெல்வம் கண்டித்து பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். பின்னர் ஞானசெல்வம் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த மாணவி மனவிரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்த ஞானசெல்வம் தனது மகள் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அலறினார். தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.