தாயாருடன் தகராறு: சகோதரர்கள் சண்டையிட்ட போது நடந்த விபரீதம்

3 months ago 16

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் ஆசாரிமார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன்கள் சுபாஷ் (வயது 30), சுந்தர் (25). இவர்களில் சுபாஷ் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், கோதைகிராமத்தை சேர்ந்த அபிநயா (22) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சுபாஷ் தன்னுடைய மனைவியுடன், பெற்றோர் வீட்டின் அருகே தனியாக வசித்து வந்தார்.

சுபாஷ் தினமும் இரவில் மதுக்குடித்து விட்டு வந்து தனது பெற்றோருடன் தகராறு செய்வது வழக்கமாம். இதே போல நேற்று அதிகாலை 2 மணிக்கு சுபாஷ் மதுபோதையில் அவருடைய தாயார் சுப்புலட்சுமியிடம் தகராறு செய்து தாக்கியதாக தெரிகிறது. இதை தடுக்க வந்த மனைவி அபிநயாவுக்கும் அடி விழுந்தது. மேலும் சுபாஷ் கையில் கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார்.

இதை பாா்த்த சுபாஷின் தம்பி சுந்தர், மதுபோதையில் அண்ணன் கத்தியை வைத்து தகராறு செய்ததால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவரிடம் இருந்து கத்தியை வாங்க முயன்றார். ஆனால் சுபாஷ் கத்தியை கொடுக்க மறுத்ததோடு, சுந்தருடன் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் அண்ணன் கையில் இருந்த கத்தியை சுந்தர் வலுகட்டாயமாக பிடுங்க முயன்ற போது 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் எதிர்பாராத விதமாக சுபாஷ் கையில் வைத்திருந்த கத்தி அவரது இடதுபுற மார்புக்கு கீழ் பகுதியில் ஆழமாக குத்தியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபரீத சம்பவத்தை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கத்திக்குத்தில் காயமடைந்த சுபாஷை உறவினர்களின் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.

Read Entire Article