தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த விவகாரம் பாஜ நிர்வாகி கேசவ விநாயகத்திடம் 6 மணிநேரம் விசாரணை: 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு வாக்குமூலம் பதிவு; நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு

3 months ago 16

சென்னை: நாடாளுமன்ற தேர்தலின் போது கடந்த மார்ச் 26ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிபிசிஐடி வழக்கு பதிந்து விசாரித்தபோது, பணத்துடன் பிடிபட்ட 3 பேர், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்கு மூலம் அளித்தனர். அதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் பாஜ தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தனின் மகன்கள் பாலாஜி, கிஷோர் மற்றும் பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உட்பட 14 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

பிறகு வாக்குமூலத்தின் படி ஆர்.எஸ்.எஸ்.பிரமுகரும் பாஜ மாநில அமைப்பு செயலாளரான கேசவ விநாயகத்திடம் கடந்த ஜூன் 5ம் தேதி சிபிசிஐடி போலீசார் 5 மணி நேரம் விசாரித்தனர். அதை தொடர்ந்து ஜூலை 16ம் தேதி பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரனிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். சிபிசிஐடி இறுதி கட்ட விசாரணையின் போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஈரோட்டை சேர்ந்த ரயில்வே கேண்டீன் உரிமையாளர் முஸ்தபா, ரூ.4 கோடி பணம் தன்னுடையது என்று உரிமை கோரினார்.

அதனை தொடர்ந்து முஸ்தபாவிடம் 10 மணி நேரம் விசாரித்தனர். விசாரணையில் முஸ்தபா வங்கி கணக்குகள் மற்றும் அவர் நடத்து ரயில்வே கேன்டீன் வங்கி கணக்குகளில் ரூ.4 கோடி பணம் தொடர்பாக எந்த பரிமாற்றமும் நடைபெற வில்லை என உறுதியானது. முக்கிய அரசியல் பிரமுகரின் அழுத்தம் காரணமாக முஸ்தபா ரூ.4 கோடியை தனது என்று உரிமை கோரியதும், தனக்கு அழுத்தம் கொடுத்த நபர்கள் குறித்து சிபிசிஐடியிடம் தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து மீண்டும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். அதன்படி, மீண்டும் கேசவ விநாயகத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்து சம்மன் அனுப்பினர்.

அதனை தொடர்ந்து கேசவ விநாயகம் நேற்று காலை சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை அதிகாரிகள், “நயினார் நாகேந்திரன் எனக்கும் ரூ.4 கோடி பணத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறுகிறார். ஆனால் சென்னையில் இருந்து யாருக்காக ரூ.4 கோடி பணம் நெல்லைக்கு அனுப்பட்டது. விசாரணையின் இடையே வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத ஈரோடு ரயில்வே கேண்டீன் உரிமையாளர் முஸ்தபா தனது பணம் என்று யார் அழுத்தத்தின் காரணமாக உரிமை கோரினார்? வழக்கில் உங்களுக்கு தொடர்பு இல்லை என்றால், ஏன் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க நீதிமன்றத்தை அணுகுனீர்கள்” உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கேள்விகளை சிபிசிஐடி அதிகாரிகள் கேசவ விநாயகத்திடம் கேட்டு வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.தொடர்ந்து 6 மணி நேரம் நடந்த விசாரணை மாலை 5 மணிக்கு முடிந்தது. அதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரனிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

The post தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த விவகாரம் பாஜ நிர்வாகி கேசவ விநாயகத்திடம் 6 மணிநேரம் விசாரணை: 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு வாக்குமூலம் பதிவு; நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article