தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் சிக்கிய விவகாரம்; புதுச்சேரி பாஜக எம்பி செல்வகணபதியிடம் 10 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை

3 days ago 1

சென்னை: நாடாளுமன்ற தேர்தலின் போது கடந்த மார்ச் 26ம் ேததி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்துடன் பிடிபட்ட பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஓட்டல் மேலாளர் உட்பட 3 பேர், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்கு மூலம் அளித்தனர்.

அதனை தொர்டர்ந்து சிபிசிஐடி போலீசார் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் வைகுண்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் பாஜக தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தனின் மகன்கள் பாலாஜி, கிஷோர் மற்றும் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உட்பட 15 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

இந்த வழக்கில் திடீரென யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஈரோடு பகுதியை சேர்ந்த ரயில்வே கேன்டீன் உரிமையாளர் முஸ்தப்பா என்பவர் ரூ.4 கோடி பணம் தன்னுடையது என்று உரிமை கோரினார். பிறகு முஸ்தப்பாவின் வங்கி கணக்குகள், ரயில்வே கேன்டீன் வங்கி கணக்குகள் தொடர்பான விபரங்களை பெற்று சிபிசிஐடி ஆய்வு செய்த போது, ரூ.4 கோடி பணம் தொடர்பாக எந்த பரிமாற்றமும் நடைபெற வில்லை என உறுதியானது. அதை தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்திடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கேசவ விநாயகம் அளித்த தகவலின் படி, ரூ.4 கோடி தொடர்பாக விசாரணை நடத்தும் வகையில் சிபிசிஐடி போலீசார், புதுச்சேரி மாநில தலைவரும் மாநிலங்களவை உறுப்பினரான செல்வகணபதி மற்றும் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் லால்வானி மற்றும் என்எஸ்சி போஸ் சாலையை சேர்ந்த சூரஜ் ஆகியோருக்கும் நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர்.

ஆனால் பாஜக எம்பி செல்வகணபதி தனக்கு உடல் நிலை பாதித்துள்ளதாக 3 மாதம் அவகாசம் கேட்டு சிபிசிஐடி அதிகாரிகளிடம் மனு அளித்தார். அந்த மனுவை தொடர்ந்து தற்போது மீண்டும் செல்வகணபதிக்கு சிபிசிஐடி போலீசார் கடந்த வாரம் சம்மன் அனுப்பினர். அந்த சம்மனை தொடர்ந்து செல்வகணபதி நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ.4 கோடி பணம் தொடர்பாக விசாரணை நடத்தினர். 10 மணி நேரம் நடந்த விசாரணையில் செல்வகணபதி ரூ.4 கோடி பணம் தொடர்பாக முக்கிய தகவல்கள் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதை சிபிசிஐடி போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
இதையடுத்து இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி எம்பி செல்வகணபதி அளித்த வாக்குமூலத்தின் படி விரைவில் ரூ.4 கோடி பணம் யாருக்கு சொந்தமானது என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

The post தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் சிக்கிய விவகாரம்; புதுச்சேரி பாஜக எம்பி செல்வகணபதியிடம் 10 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article