தாம்பரம் மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பேனர்களால் விபத்து அபாயம்

3 months ago 15

* அத்துமீறும் தனியார் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தாம்பரம்: தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 5 மண்டலங்கள், 70 வார்டுகள் உள்ளன. மொத்தம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரைதல் போன்ற அழகுப்படுத்தும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சமீப காலமாக தனியார் நிறுவனங்கள் சார்பில் உரிய அனுமதியின்றி தெருக்கள், சாலைகள், மின் கம்பங்கள் மற்றும் கட்டிடங்கள் மீது விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, சாலை சந்திப்பு, வளைவு பகுதி, மின் கம்பங்களில் விதிமீறி பெரிய அளவிலான பேனர்களை தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ளன. இவை காற்றில் பறந்து ஆபத்தான முறையில் தொங்குவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், சாலையை மறைத்து வைக்கப்பட்டுள்ள பேனர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்கள், சாலைகள், சாலை சந்திப்புகளில் அனுமதி இன்றி தனியார் சார்பில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுகிறது. குறிப்பாக மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர பேனர்களால் மழை மற்றும் காற்று வீசும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

அதிவேகமாக காற்று வீசும் நேரங்களில் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் பறந்து சென்று சாலைகளில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மேல் விழும் நிலை இருப்பதால் அவற்றை அகற்ற வலியுறுத்தி பலமுறை தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு புகார் தெரிவிக்கும் போதெல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு வாரம் என்ற கணக்கில் விளம்பர பேனர்களுக்கு முறைகேடாக வாய்மொழி அனுமதி வழங்கி, அதற்காக அதிகாரிகள் சிலர் பணம் பெற்றுக்கொள்கின்றனர். பின்னர் ஒரு வாரம் முடிந்தவுடன் நடவடிக்கை எடுத்தது போல் அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை அகற்றுவது போல் அகற்றி நடவடிக்கை எடுத்ததாக காட்டிக்கொள்கின்றனர்.

எனவே, மழைக்காலம் தொடங்க உள்ளதால், விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன், மின்கம்பங்கள், தெருக்கள், சாலைகள், கட்டிடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விதிமீறி விளம்பர பேனர் வைப்பவர்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post தாம்பரம் மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பேனர்களால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Read Entire Article