தாம்பரம் மாநகராட்சி பகுதியில் தெரு நாய்கள், மாடுகளை கட்டுப்படுத்துவது எப்படி? மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை

4 months ago 10

தாம்பரம்: தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. இதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தினமும் தெருநாய்கள், மாடுகள் தொல்லைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த தாம்பரம் மாநகராட்சி சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் தினமும் ஏதாவது ஒரு பகுதியில் தெரு நாய்களாலும், சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளாலும் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

எனவே, மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் மற்றும் மாடுகளை கட்டுப்படுத்துவது, டிரேட் லைசென்ஸ் குறித்து தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம், சுகாதாரப் பிரிவு மற்றும் பொறியாளர் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் கூறியதாவது: மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதாரப்பிரிவு, பொறியாளர் பிரிவு அதிகாரிகளுடன் வழக்கமாக நடைபெறும் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். அதில் மாநகராட்சி பகுதிகளில் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சைகள் கூடுதலாக மேற்கொள்வது குறித்தும், சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

மாடுகளைப் பொறுத்தவரை கடந்த மாதம் சுமார் 240க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து சாலைகளில் மாடுகள் திரிந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வரும் வாரத்தில் ஒரு நாள் தேர்வு செய்யப்பட்டு அன்று மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகளை பெருமளவில் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. டிரேட் லைசென்ஸ் முறைப்படுத்துவது குறித்தும், குப்பையை சேகரித்து அகற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியில் தற்போது தெரு நாய்களுக்கான அறுவை சிகிச்சை மையம் பாரதிபுரம் பகுதியில் மட்டும் செயல்பட்டு வருகிறது.

அதை விரிவுபடுத்தும் விதமாக குண்டு மேடு, திருநீர்மலை டேங்க், அனகாபுத்தூர் பகுதிகளில் மூன்று புதிய அறுவை சிகிச்சை மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இவை அமைக்கப்பட்ட பின்னர் நான்கு அறுவை சிகிச்சை மையங்களிலும் சேர்த்து ஒரு மாதத்திற்கு குறைந்தது 800 முதல் 1000 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். மேலும் தாம்பரம் மாநகராட்சியின் வாய்ஸ் ஆப் தாம்பரம் என்ற செயலி மூலம் வரும் குப்பை கழிவுகள் சம்பந்தமான புகார்களை ஆய்வு செய்து உடனுக்குடன் சரி செய்யவும், மீதமுள்ள பெரும்பாலான புகார்களை 24 மணி நேரத்திற்குள்ளாக சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கன்னடபாளையம், விசேஷபுரம், மாடம்பாக்கம், சீனிவாசபுரம் பகுதிகளில் உள்ள குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு பின்னர் ஆப்பூர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொட்டப்படும் குப்பை கழிவுகளை கொட்டி தேக்கி வைக்காமல் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் 10 முதல் 12 டன் கொள்ளளவு கொண்ட தலா ஒரு கன்டெய்னர் பெட்டி வைக்கப்பட்டு அதில் குப்பை கழிவுகளைக் கொட்டி அவற்றை உடனுக்குடன் ஆப்பூர் பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தாம்பரம் மாநகராட்சி பகுதியில் தெரு நாய்கள், மாடுகளை கட்டுப்படுத்துவது எப்படி? மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article