தாம்பரம் அருகே பள்ளத்தில் சரிந்த சிறு பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

3 months ago 14

தாம்பரம்: தாம்பரம் – தர்காஸ் பிரதான சாலை சேதமடைந்து, ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையை பலப்படுத்தி, அகலப்படுத்த ₹13 கோடி மதிப்பீட்டில் சுமார் 1.80 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வெள்ள தடுப்பு கான்கிரீட் சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சுமார் 12 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் சுவர் கட்டும் பணிகள் நடக்கிறது. இந்த பணிக்காக தர்காஸ் சாலையில் இருந்து இந்திரா நகர் பகுதிக்கு செல்லும் சிறு பாலம் அருகே நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி பள்ளம் தோண்டி, மண் சரிவு ஏற்படாமல் இருக்க இரும்பு தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆனால் 24ம் தேதி காலை இரும்பு தடுப்புகளையும் மீறி அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.

இதில் தர்காஸ் பிரதான சாலையில் இருந்து இந்திரா நகர் பகுதிக்கு செல்லும் சிறிய பாலம் பள்ளத்தில் சரிந்தது. இதனால், இந்திரா நகர் பகுதி மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்கு வாகனங்கள் செல்ல முடியாமலும், அந்த பகுதியில் இருந்து வெளியே வாகனங்கள் வர முடியாத நிலையும் ஏற்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் சாய்ந்த சிறு பாலத்தில் ஆபத்தான முறையில் நடந்து மட்டுமே சென்றுவரும் நிலை ஏற்பட்டது. தகவலறிந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மண்டல குழு தலைவர் டி.காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் தற்காலிகமாக சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பரேில், இந்திரா நகரில் இருந்து வெங்கடேஸ்வரா நகர் வழியாக தற்காலிக மாற்று பாதை அமைக்கப்பட்டது. மேலும் சரிந்த பாலத்தை ஒரு மாதத்திற்குள் சரி செய்து தருவதாக நெடுஞ்சாலை துறையினர் உறுதியளித்தனர். ஆனால், நெடுஞ்சாலை துறையினர் உறுதி அளித்தது போல் இதுவரை சரிந்த பாலத்தை சரி செய்யவில்லை. இதனால், பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு சென்று வர கடும் அவதிப்படுகின்றனர். தினமும் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், சிறு பாலத்தை விரைந்து சீரமைக்க வலியுறத்தி, அப்பகுதி பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் தாம்பரம் – தர்காஸ் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த தாம்பரம் மற்றும் பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசார் அங்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி சரிந்த தரைப்பாலத்தை இதுவரை சீரமைக்காததால், இந்திரா நகர் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சிறு பாலத்தை விரைந்து சீரமைத்து தர வேண்டும்,’’ என்றனர்.

The post தாம்பரம் அருகே பள்ளத்தில் சரிந்த சிறு பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article