‘‘இலைக்கட்சி தலைவர் தொகுதி மாறப்போறாரா என்ன..’’ என்று ஆச்சர்யக் கேள்வியோடு வந்தார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் எடப்பாடி தொகுதிக்குள்ளாற யாரும் எளிதில் நுழைந்து விடமுடியாதாம். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தானே தான் செய்வேன் என்பதில் பிடிவாதமாக இருப்பாராம்.மாவட்ட செயலாளராக யார் இருந்தாலும் எல்லாமுமாக இருப்பவர்தான் இந்த இலைக்கட்சி தலைவராம். இவரை விட்டால் குறிப்பிட்டு சொல்லும் வகையில் கட்சிக்காரங்க யாருமே இல்லையாம்.. விரல்விட்டு எண்ணிவிடும் வகையில் தான் கட்சிக்காரங்க வசதியோட இருக்காங்களாம். மற்றவர்களெல்லாம் கொடி பிடிச்சிக்கிட்டு சும்மாதான் சுத்திக்கிட்டு இருப்பாங்களாம். அவர்களை பொருளாதார வளர்ச்சியில் கை தூக்கி விடும் வகையில் எந்த உதவியையும் செய்யமாட்டாருன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க.. இந்த நிலையில்தான் முதன்முறையாக அவரது தொகுதிக்குள் மாஜி மந்திரி சிவந்த மலைக்காரர் புகுந்துள்ளது கட்சிக்காரர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்காம்..
வெயிலுக்காக எடப்பாடி தொகுதியில தண்ணீர் பந்தல் திறக்க கட்சிக்காரங்க ஏற்பாடு செஞ்சிருக்காங்க.. ஏற்பாடு செஞ்சவரு இலைக்கட்சித்தலைவர் திறக்க வருவதாக சொல்லியிருக்காரு.. ஆனால் அவரால் வரமுடியலையாம்.. நாலரை ஆண்டுகள் ஆட்சியின்போது எம்எல்ஏக்களை நன்றாக கவனிச்சிக்கிட்டாராம்.. கூவத்தூரில் தொடங்கிய கவனிப்பு ஆட்சி முடியும்வரை நடந்துச்சாம். செல்வசெழிப்போடு இருந்த நிலையில் ஆட்சி பறிபோச்சுதாம்.. அதன்பிறகு வெற்றிபெற்ற எம்எல்ஏக்களை கவனிக்காமல் விட்டுட்டாராம்.. அவர்கள் எல்லோரும் ரொம்பவே சோர்வாகி மனம்மாறிக்கிட்டு வருவதை இலைக்கட்சி தலைவர் தெரிஞ்சிக்கிட்டாராம்.. இதனால் அவர்களை குஷிப்படுத்த முடிவு செஞ்சி அதற்கான வேலையில் ஈடுபட்டிருக்காராம்.. இதனால தொகுதி தண்ணீர் பந்தலை திறக்கபோக முடியலயாம். இதன்பிறகுதான் மாஜி மந்திரியை தண்ணீர் பந்தலை திறக்கச்சொல்லியிருக்காரு.. ஆனால் இந்த மாற்றத்திற்கு இலைக்கட்சி தலைவர் தொகுதி மாற திட்டம் போட்டிருப்பாரோன்னு சந்தேகப்படுறாங்களாம்.. தொகுதி மாறினால்கூட தொகுதியில் உள்ள கட்சிக்காரர்களை நியமிக்க மாட்டாருன்னு சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சைலண்ட் ேமாடில் இருக்காராமே புல்லட்சாமி..’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரியில் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டதாம். கூட்டணி மாற்றத்துக்கான ஆலோசனைகளும் உள்கட்சிக்குள் ஓடுகிறதாம். தமிழகத்துல தாமரையுடன் இலை ஒட்டிவிட்ட நிலையில் புல்லட்சாமியின் ஜக்கையும் அணியில் தொடர நெருக்கடி கொடுக்கப்படுகிறதாம். ஆனால் புல்லட்சாமிக்கோ நடிகருடன் கைகோர்க்கும் எண்ணம் இருப்பதால் எந்த பிடியும் கொடுக்காமல் நழுவினாராம். பொதுப்பணி முறைகேடு சிபிஐயிடம் சிக்கவே, இப்போது புல்லட்சாமி கன்ட்ரோல் முழுவதும் தாமரையிடம் உள்ளதாம். இதனால் தலையாட்டி பொம்மையாக புல்லட்சாமி உலாவுகிறாராம். சமீபகாலமாக கட்சிக்குள்ளே மாறுபட்ட கருத்து நிலவுகிறதாம். தாமரையுடன் பட்ட பாடுகள் போதும், அணியை மாத்துங்கோ என்ற கோஷம் சிட்டிங் பிரதிநிதிகளிடம் வலுத்துள்ளதாம். இதனால் சைலண்ட் மூடில் இருக்கிறாராம் புல்லட்சாமி’’ என்றார் விக்கியானந்தா…
‘‘ஆளைத்திரட்ட அள்ளிக்கொடுத்தும் கூட்டம் இல்லையாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் இலை கட்சி சார்பில் மாஜி அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிகளவில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என மாஜி அமைச்சர், கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டு இருந்ததாராம். இந்த உத்தரவை தொடர்ந்து ‘விட்டமின் ப’ கொடுத்து கூட்டத்தை கூட்ட நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர். இதற்காக லோக்கலில் உள்ளவர்களுக்கு முதல்நாளே ‘விட்டமின் ப’ கொடுத்து அழைக்கப்பட்டதாம். ஆனால், எதிர்பார்த்த அளவில் கூட்டம் வரவில்லையாம்… இதையடுத்து, அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ‘விட்டமின் ப’ கொடுக்கப்பட்டு அவசர அவசரமாக ஆர்ப்பாட்டம் நடந்த மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டு இருந்தனர். அப்போதும், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வந்து சேரவில்லை. ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அந்த நிர்வாகிகளை தனியாக அழைத்து மாஜி அமைச்சர் கடிந்து கொண்டார். இதனால் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகள் அப்செட்டில் சென்றார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஒன்றிய அதிகாரிகளுக்கு செம டோஸ் விழுந்துச்சாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஒன்றிய அரசு மட்டுமல்ல, ஒன்றிய அரசின் அதிகாரிகளும் தமிழ்நாட்டை எப்படி வஞ்சிக்கின்றனர். வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு எவ்வாறு தடையாக இருக்கின்றனர் என்பதை அல்வா மாவட்டத்தில் நடந்த கூட்டம் உறுதிப்படுத்தி இருக்கு. அதாவது ஒன்றிய அரசின் நிதி எந்தெந்த துறைகளுக்கு எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை ஒவ்வொரு மாவட்டங்களிலும் லோக்சபா எம்பி தலைமையிலான மாவட்ட கண்காணிப்புக் குழு கண்காணிக்கும். இந்த கண்காணிப்புக் குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை அந்த மாவட்ட கலெக்டர் முன்னிலையில் கூடி பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்யும். அல்வா மாவட்டத்தில் அந்த தொகுதியின் எம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் நான்கு வழிச்சாலை பணியை கவனிக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும், ரயில்வே துறை அதிகாரிகளும் பணி குறித்து எதுவுமே தெரியாத அதிகாரியை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார்களாம். எம்பியும், கலெக்டரும் எழுப்பிய கேள்விக்கு ஆய்வுக் கூட்டத்திற்கு வந்த அதிகாரிகள் பதில் கூட சொல்லத் தெரியாமல் திருதிருவென விழித்தார்களாம். நாட்டின் உயர்ந்த சபை தான் நாடாளுமன்றம். அதன் பிரதிநிதியாகத் தான் எம்பி இந்த கூட்டத்தை நடத்துகிறார். அதற்கு கூட தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் வரமுடியவில்லையா, கடந்த மூன்று கூட்டங்களாக வரவில்லை, அப்படி என்றால் நாடாளுமன்றத்தையே அவமதிப்பு செய்கிறாரா என திட்ட இயக்குநரை கலெக்டர் கடிந்து கொண்டாராம். இதையும் கேட்டுக் கொண்டு எதுவுமே உறைக்காதது போல் வந்திருந்த அதிகாரிகள் மவுனம் சாதித்தார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை கட்சியின் பழைய தலைவர் மேல ஏக கடுப்புல இருக்காராமே புது தலைவர்’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியின் மாநில தலைவராக இருந்த ஐபிஎஸ் அதிகாரியை மாற்றினாலும், தன் இருப்பை காட்டிக் கொள்வதற்காக தமிழகத்துக்கு வந்து வழக்கம்போல ஏதாவது அடிச்சிவிடுகிறாராம். குறிப்பாக கூட்டணி குறித்தெல்லாம் ஐபிஎஸ் அதிகாரி பேட்டி கொடுக்கிறாராம். இதைப் பார்த்த மாநில தலைவர் கடுப்பாகியுள்ளாராம். போலீசிலும் மாஜியாகிவிட்டார், மாநில தலைவர் பதவியிலும் மாஜியாகிவிட்டார். 2 மாஜி ஆகியும் அவர் திருந்தாமல் உள்ளாரே என்று கூட இருப்பவர்களிடம் புது தலைமை புலம்புகிறாராம். கூட்டணி குறித்து சில மாதங்களுக்கு முன்னர் நெல்லையில் பேட்டி கொடுத்ததும், அது அவரது தனிப்பட்ட கருத்து. இனிமேல என்னிடம் கேட்காமல் யாரும் பேட்டி கொடுக்கக் கூடாது என்று பத்திரிகையாளர்கள் மூலம் கடிந்து கொண்டார். இப்போது மட்டும் என்னிடம் கேட்காமல் பேட்டி கொடுத்தால் எப்படி. நான்தான் தலைமை. நான்தான் சொல்லனும். இதேபோல தொடர்ந்து செய்தால், விரைவில் டெல்லியில் புகார் செஞ்சு, இருக்கிற பவரையும் பிடுங்கி விட்டிர வேண்டியதுதான் என்று தன் நெருங்கிய சகாக்களிடம் தம் கட்டி பேசுகிறாராம் புது தலைவர்..’’ என்றார் விக்கியானந்தா.
The post தாமரை கட்சியின் பழைய தலைவர் மீது படு கடுப்பில் இருக்கும் புதிய தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.