தாது மணல் முறைகேட்டில் ரூ.5,832 கோடி அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம் வி.வி.மினரல்ஸ் நிறுவனங்களில் சிபிஐ சோதனை

16 hours ago 3

* சென்னை, நெல்லையில் 13 இடங்களில் நடந்தது, முக்கிய ஆவணங்கள் சிக்கின

நெல்லை: நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் அளவுக்கு அதிகமாக தாதுமணல் அள்ளிய விவகாரத்தில், ரூ.5 ஆயிரத்து 832 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், சென்னை, நெல்லையில் உள்ள வி.வி.மினரல்ஸ் நிறுவனங்கள் உட்பட 13 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே கீரைக்காரன்தட்டில் வி.வி.மினரல்ஸ் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனத்தை வி.வைகுண்டராஜன் மற்றும் அவரது சகோதரர்கள் நடத்தி வருகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடற்கரை பகுதிகளில் கிடைக்கும் தாது மணலை எடுத்து சுத்திகரிப்பு செய்து அதில் கிடைக்கும் கார்னெட், ரூட்டைல், இலுமனைட், சிர்க்கான் போன்ற தாதுக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். இவர்கள் கடற்கரையோர பகுதிகளில் அனுமதியை மீறி அளவுக்கு அதிகமாக தாது மணல் அள்ளியதாக புகார் எழுந்தது. தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடல் பகுதியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதை அப்போதைய தூத்துக்குடி கலெக்டராக இருந்த ஆஷிஸ்குமார் கண்டுபிடித்தார்.

அவர் உடனடியாக மாற்றப்பட்ட போதிலும், 25 ஆண்டுகளாக மணல் தொழிலில் கோலோச்சி வந்த வைகுண்டராஜனின் சாம்ராஜ்யம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த விவகாரத்தை தொடர்ந்து 2013 செப்டம்பர் 17ம் தேதி தாது மணல் அள்ள தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மேலும் ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விவி மினரல்ஸ் நிறுவன தொழிற்சாலை, கடற்கரையோர பகுதிகள், குடோன்களில் ஆய்வு நடத்தியது. பல்வேறு குழுக்கள் அடங்கிய அதிகாரிகள் நடத்திய இந்த ஆய்வில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பெருமளவு தாது மணல் அள்ளியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சிறப்புக் குழுவின் ஆய்வறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு பிறகும் தடையை மீறி விவி மினரல்ஸ் நிறுவனம் தாது மணலை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது, நெல்லை கலெக்டராக கருணாகரன் இருந்த போது, கடந்த 2017ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தென்மாவட்டங்களை புரட்டிப் போட்ட தாதுமணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

அப்போது தமிழக அரசின் தொழில்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘தாது மணல் எடுப்பதற்கு 7 நிறுவனங்களுக்கு நெல்லையில் 52 உரிமங்கள், தூத்துக்குடியில் 6, குமரியில் 6 என மொத்தம் 64 உரிமங்கள் வழங்கப்ப்பட்டதாகவும், சட்டவிரோதமாக தாதுமணல் எடுப்பது தொடர்பான புகார்களின் அடிப்படையில், 2013 முதல் அதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும்’ தெரிவிக்கப்பட்டது. தாது மணல் இழப்பை ஈடுகட்டும் வகையில் ரூ.5,832 கோடியை தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடம் இருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், இடிந்தகரை, திசையன்விளை சுற்றுவட்டாரங்கள், கூத்தங்குழி பகுதிகளில் 10 ஆண்டுகளில் இலுமினைட், சிர்கான், கார்னெட் உள்ளிட்ட தாது மணல்கள் 80 லட்சம் டன்னுக்கு மேலாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் தாது மணல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி ஜோதிராமன் அமர்வில் விசாரணை நடந்தது. இதில் நெல்லை மாவட்ட நிர்வாகம், வி.வி மினரல், பீச் மினரல் கம்பெனி, டிரான்ஸ்வேர்ல்டு நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் 60 நாட்களுக்குள் ரூ.3528 கோடி அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் வி.வி.மினரல்ஸ், பீச் மினரல்ஸ், இன்டஸ்ட்ரியல் மினரல்ஸ் ஆகிய நிறுவனங்கள் வைகுண்டராஜன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சொந்தமானவை. இதில் விவி மினரல்ஸ் நிறுவனம் மட்டுமே ரூ.2195 கோடி அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து தாது மணல் ஆலை உரிமையாளர்கள், உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், ரூ.5 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கும் அளவிற்கு விதிமீறல் நடந்திருந்தால், இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து அரசு விரிவான விசாரணை நடத்தவும், தொடர்புடைய நபர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கீரைக்காரன் தட்டு கிராமத்தில் உள்ள வைகுண்டராஜனுக்கு சொந்தமான தாது மணல் ஆலைகளின் தலைமை அலுவலகமான விவி மினரல்ஸ், அவரது சகோதரருக்கு சொந்தமான ஐஎம்சி, பிஎம்சி நிறுவனங்களின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை சுமார் 10 மணி அளவில் திடீரென நுழைந்த 20க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் 7 கார்களில் பாதுகாப்புக்காக போலீசாருடன் வந்தனர்.

போலீசார் ஆலைக்கு வெளியே நிற்க, சிபிஐ அதிகாரிகள் ஆலைக்குள் சென்று சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த சோதனையில் பீரோவில் இருந்து முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், வைகுண்டராஜன் மற்றும் அவரது சகோதரர்கள் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடந்தது. இந்த சோதனை இரவு 8.30 மணி அளவில் நிறைவடைந்தது.

இதேபோல், சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் செயல்பட்டு வரும் விவி மினரல்ஸ் அலுவலகத்துக்கு நேற்று காலை 9 மணிக்கு 10-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் 2-க்கும் மேற்பட்ட கார்களில் வருகை தந்தனர். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். எழும்பூரில் உள்ள விவி மினரல்ஸ் தொடர்புடைய மற்றொரு அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். எழும்பூர் தமிழ் சாலையில் வசித்து வரும் ஆடிட்டர் ஹரி என்பவரின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 13 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது.

நள்ளிரவைக் கடந்து நடைபெற்ற இந்த சோதனையில், தாது மணல் விற்பனையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான முழு விவரங்களை அளிக்கமுடியும் என சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வெளிச்சத்திற்கு வருமா?
தாது மணல் தொழிலில் சத்தமின்றி கோலோச்சிய வைகுண்டராஜனுக்கு சொந்தமான ஆலைகள் கடந்த 10 ஆண்டுகளாக சரிவை சந்தித்தது. பல்வேறு சோதனைகள், ஆய்வுகள் கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ள நிலையில், தற்போது சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் வெளிநாடுகளுக்கு சட்டவிரோத ஏற்றுமதி உள்ளிட்ட வெளிச்சத்திற்கு வராத உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது.

* தடைக்கு பிறகும் நடந்த ஏற்றுமதி
தாது மணல் ஏற்றுமதிக்கு தமிழ்நாடு அரசு 2013 செப்.17ல் தடை விதித்தது. அது முதல் நவம்பர் 2016 வரை விவி மினரல் நிறுவனம் 9.65 லட்சம் மெட்ரிக் டன், டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட் நிறுவனம் 1.06 லட்சம் மெட்ரிக் டன், பீச் மினரல் கம்பெனி 3.37 லட்சம் மெட்ரிக் டன், ஐஓஜிஎஸ் நிறுவனம் 1.06 லட்சம் மெட்ரிக் டன், ஐஎம்சி நிறுவனம் 3.11 லட்சம் மெட்ரிக் தாது மணலை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததை அப்போதைய ெநல்லை கலெக்டராக இருந்த கருணாகரன் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

The post தாது மணல் முறைகேட்டில் ரூ.5,832 கோடி அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம் வி.வி.மினரல்ஸ் நிறுவனங்களில் சிபிஐ சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article