தவெகவுடன் கூட்டணி: தமிழ்நாடு முஸ்லிம் லீக் மறுப்பு

2 months ago 12

சென்னை,

அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள விஜய், சட்டமன்றத் தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் விஜய் இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை என்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பலம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி வரும் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் நெருங்கும் போது கூட்டணிக் குறித்து பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் முதல் கட்சியாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்ததாகவும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கூட்டணியில் இணையும் என்று கூறியதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

தவெக தலைவர் விஜய் அவர்களுடான சந்திப்பு பற்றி தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவன தலைவர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேற்று தவெக தலைவரும் நடிகருமான அன்பு சகோதரர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து அரசியல் களத்திற்கு வந்ததற்காக வாழ்துகளை தெரிவித்தோம். அவரும் உங்களது இயக்கம் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். தேர்தல் நேரத்தில் அதுபற்றி கட்சியினரோடு கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக கூறினோம். மேலும் சமூகவலைதளங்களில் கூட்டணி தொடர்பாக வரும் தகவல்கள் எதுவும் உண்மையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நல்லதொரு சந்திப்பினை ஏற்பாடு செய்து கொடுத்த சகோதரர் ஆதவ் அர்ஜுனா அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 

Read Entire Article