விழுப்புரம்,
தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் முதல் அரசியல் மாநாடு நேற்று மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் வெற்றிக் கொள்கை திருவிழா மாநாடாக நடைபெற்றது. மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் கார், வேன், பஸ்களில் வந்து கலந்துகொண்டனர்.
மாநாடு முடிந்ததும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து சென்றன. வி.சாலையில் இருந்து விழுப்புரம் வரையிலான 18 கி.மீ. தூரத்தை கடந்து செல்லவே 5 மணி நேரம் வரை ஆனது. அந்தளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதைப்போல, வி.சாலை மாநாட்டுத் திடலில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரம் தேசிய நெடுஞ்சாலையிலும், அதன் சர்வீஸ் சாலையிலும் விடிய, விடிய தொண்டர்கள் நடந்தே விழுப்புரம் வரை சென்றனர். அதன்பிறகு அவர்கள், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏறி தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
பலர் வி.சாலையில் இருந்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வரை 6 கி.மீ. தூரம் நடந்து சென்று அங்கு பூட்டப்பட்டிருந்த கடைகளின் வாசல்களில் படுத்து தூங்கி எழுந்து அதிகாலை வேளையில் அவ்வழியாக இயக்கப்பட்ட பஸ்களில் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.