
சென்னை,
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். 'அனிமல்' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
அண்மையில் கிடைத்த தகவல்படி விஜய் இப்படத்தில் முன்னாள் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்று இணையத்தில் பரவி வருகிறது. எச் வினோத் இதற்கு முன் 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படத்தில் அசத்தலான காவல் கதாப்பாத்திர கதையை கூறியிருந்தார். அதேபோல் இப்படமும் மிகவும் வலிமையான கதையைக் கூறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.