தலைமையிடம் கம்பு சுற்றும் மாவட்ட தலைவரால் மலராத கட்சியின் மாஜி தேசிய செயலாளர் வருத்தத்தில் இருப்பதுபற்றி சொல்கிறார்: wiki யானந்தா

18 hours ago 2

‘‘பல மாவட்டங்களில் திருட்டு வழக்கு குற்றவாளிகள் கை, கால் உடையும் செய்தி வரும் நிலையில் குண்டு வீச்சு குற்றவாளிளை பிடித்தும் சைலன்ட்மோடில் இருக்காங்களாமே காக்கிகள் எங்க..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் பல மாவட்டங்களில் திருட்டு வழக்கு குற்றவாளிகளுக்கு கூட வழுக்கி விழுந்து கை, கால் உடைகிறதாம்.. அந்தளவு ரவுடிகள் மீது காக்கிகள் தடாலடி காட்டுகிறார்களாம்.. ஆனால் புரம் மாவட்டத்திலோ குண்டுவீச்சு நடந்தும் குற்றவாளிகள் மீது எந்தவித அதிரடியும் இல்லையாம்.. சமீபத்தில் போலீசார் மீது காரை மோதிவிட்டு குட்கா கடத்தல்காரர்கள் பறந்தார்களாம்.. அவர்களை சேஸ் செய்து காக்கிகள் மடக்கி பிடித்தும் சரியான கவனிப்பு இல்லையாம்.. அண்டை மாவட்டத்திலோ மாவுகட்டு, துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்திடுச்சாம்.. ஆனால் இங்குள்ளதைவிட பெரிய குற்றங்களில் துணிச்சலாக ரவுடிகள் ஈடுபட்டாலும் இதுவரையிலும் புரம் காக்கிதுறை சைலன்ட்மோடில்தான் இருக்கிறதாம்.. மாவட்ட காக்கிக்கு சில மாதங்களில் பதவிஉயர்வு வர இருக்காம்.. அதனால இப்போதைக்கு எதுவும் வேண்டாம்னு அடக்கி வாசிப்பாம்.. இந்த ரகசிய உத்தரவு பற்றிதான் புரம் முழுக்க முணுமுணுப்பாம்.. என்றார் விக்கியானந்தா.

‘‘வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் நெற்களஞ்சியத்தில் காலியாகி வரும் குக்கர் கட்சி கூடாரத்தால் தலைமையானவர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியத்தில் தேனிக்காரரின் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி வருகிறதாம்.. தேனிக்காரர் அணியை தொடர்ந்து குக்கர் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள், நெற்களஞ்சிய மாநகராட்சியில் இருந்த அதுவும் ஒரே ஒரு பெண் உறுப்பினரும் கூட கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்துக்காரர் முன்னிலையில் இணைந்துவிட்டாராம்.. குக்கர் கட்சியில் மாநகர் பொறுப்பில் உள்ள முக்கிய பிரமுகரின் தாங்க முடியாத அட்ராசிட்டியே நிர்வாகிகள் விலகி இலை கட்சியில் தஞ்சம் அடைந்ததற்கு காரணம் என தற்போது அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறதாம்…. இந்த காரணத்தால் தான் நெற்களஞ்சியத்தில் குக்கர் கட்சியில் உள்ள ஒட்டுமொத்த கூடாரமும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே காலியாகிவிடும் எனவும் கட்சிக்குள்ளே பேசிக்கிறாங்களாம்.. இந்த தகவல் தலைமையானவர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் அவர் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகிறாராம்.. இதில் ஏற்கனவே வைத்தியானவருக்கு வைத்தியம் பார்க்கும் வகையில் தேனிக்காரரின் அணியிலிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரை இலைகட்சியில் இணைப்பதற்கு பாலமாக இலை கட்சியில் மாநகர் பொறுப்பில் உள்ள முக்கிய பிரமுகர் செயல்பட்டு வருகிறாராம்.. தற்போது குக்கர் கட்சியில் உள்ள நிர்வாகிகளும் இந்த முக்கிய பிரமுகரின் முயற்சியின் பலனாக இணைந்தது சேலத்துக்காரருக்கு முக்கிய பிரமுகரின் மேல் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாம்.. இதனால் இலை கட்சியில் உள்ள இந்த முக்கிய பிரமுகருக்கு எதிராக குழி பறித்து வரும் நிர்வாகிகள் தங்களது முயற்சி எல்லாம் வீணாகி வருகிறதே என கவலையில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மலராத கட்சியின் தேசிய செயலாளர் ஆதரவாளர்களுக்கு பதவிக் கொடுக்க கூடாது என கம்பு சுற்றுகிறாராமே மாவட்ட தலைவர்…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்ட மலராத கட்சியை சேர்ந்த மாஜி தேசிய நிர்வாகி சமீபகாலமாக ரொம்ப அப்செட்டில் இருக்கிறாராம்.. ஏற்கனவே இருந்த மாவட்ட நிர்வாகி அவரது பேச்சை கேட்கவில்லை. புதிதாக வந்தவராவது தனது பேச்சை கேட்பார் என எதிர்பார்த்திருந்துள்ளார்.. ஆனால், புதிய தலைவரோ பதவி கிடைத்ததும் சென்னையில் இருந்து வந்த பிறகு ஒருமுறை தான், அதுவும் ஒரு சம்பிரதாயத்துக்கு வந்து பார்த்துள்ளார்.. அதன்பிறகு மாஜி தேசிய நிர்வாகியை கண்டுகொள்வதே இல்லையாம்.. மாஜிக்கு எதிரான நபர்களை எல்லாம் ஒன்று சேர்த்து அவருக்கு எதிராகவே அரசியலை துவக்கிவிட்டாராம்.. இதனால், ரொம்பவே விரக்தியடைந்த மாஜி, பழைய ஆட்கள் தான் தன்னை கண்டுகொள்வதில்லை என பார்த்தால், புதிதாக வந்தவர்களும் தன்னை ஒதுக்கித் தள்ளுகிறார்களே என கட்சியினரிடம் புலம்பித் தவிக்கிறாராம்.. இப்படிப்பட்ட சூழலில், குடி என முடியும் ஊரின் நகர நிர்வாகி பதவிக்கு தனது ஆதரவாளரை கொண்டு வரவேண்டும் என நினைத்து மாநிலத் தலைமையை அணுகியுள்ளார். ஆனால், அவருக்கு முன்பாக மாவட்ட நிர்வாகி சென்று மாஜி சொல்லும் யாருக்கும், எந்த பதவியும் தரக்கூடாது என கம்பு சுற்றியுள்ளார்.. இதனால், நகர தலைவர் பதவி கூட தனது ஆதரவாளருக்கு வாங்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கிறாராம் மாஜி தேசிய நிர்வாகி..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புகாரை விசாரிக்க மொய் கவர் கொடுத்துட்டு உள்ள வாங்கன்னு சொல்லும் ஒரு ஏரியா ஸ்டார் காக்கியோட அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாக இருக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலுக்கு பெயர் போன மாவட்டத்துல கசப்பான குப்பம் காக்கிகள் நிலையம் இயங்கி வருது.. மாவட்டத்திலேயே அதிகமான ஊராட்சிகளை கொண்டது இந்த ஏரியா.. இங்க 3 ஸ்டார் லேடி காக்கி ஒருத்தர் பணியாற்றி வர்றாங்க.. இந்த காக்கிகள் நிலையத்துல தினமும் நிலப்பிரச்னை, குடும்ப சண்டை, வாய்க்கால் தகராறு, சொத்து பிரச்னைன்னு ஏகப்பட்ட புகாருங்க குவியுதாம்.. புகார் வர்றதால வேலைபளு அதிகமாக இருக்குதேன்னு கவலைப்படுறதில்லையாம்.. சந்தோஷமா இருக்காங்களாம்.. அதுக்கு காரணம், வர்ற புகாரை விசாரிக்காம, முதல்ல காக்கிகள் நிலைய லிமிட்ல இருக்குற ஒரு கடையில் மொய் கவர் கொடுத்துட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிடுவாங்களாம்.. மொய் சரியாக சேர்ந்த பின்னாடித்தான் விசாரணைக்கே நிலையத்துக்குள்ள அழைப்பாங்களாம்.. இதுல மலை கிராம ஜனங்கதான் ரொம்ப பாதிக்கப்படுறாங்களாம்.. ஸ்பெஷல் பார்ட்டிகளுக்கும் இந்த மொய் விவகாரம் தெரியுமாம்.. அவருக்கும் மொய் போகுதாம்.. மொய் அதிகமாக கிடைக்குறதால எந்த ேகசா இருந்தாலும் நான்தான் வந்து விசாரிப்ேபன்னு சொல்லி அடம்பிடிக்குறாங்களாம்.. இதனால், புகார் கொடுக்க காக்கிகள் நிலையத்துக்கு போகவே ஜனங்க பயப்படுறாங்களாம்.. இது தொடர்பாக விசாரிச்சு உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்னு புகார் குரல்கள் ஒலிக்கத்தொடங்கியிருக்குது..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post தலைமையிடம் கம்பு சுற்றும் மாவட்ட தலைவரால் மலராத கட்சியின் மாஜி தேசிய செயலாளர் வருத்தத்தில் இருப்பதுபற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article