ராஜபாளையம்: சென்னை தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ராஜபாளையத்தை சேர்ந்தவர் கைதானார். சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இயங்கும் மாநில போலீஸ் கட்டுப்பாட்டு மையத்துக்கு கடந்த 4ம் தேதி இரவு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘சென்னை தலைமைச்செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகம் ஆகியவற்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்துப்பாருங்கள்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகம் ஆகியவற்றில் வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து செல்போனில் பேசி மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். இதில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (47) மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சென்னை போலீசார், ராஜபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் கார்த்திகேயனை நேற்று கைது செய்தனர்.
The post தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது appeared first on Dinakaran.