புதுடெல்லி: டெல்லி ஜங்புரா தமிழர்கள் தங்களது குடியிருப்பை அகற்றும் பணியை கைவிட கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினர். டெல்லியின் ஜங்புரா மதராசி குடியிருப்பில் வசிக்கும் தமிழர்களின் குடியிருப்புகளை இடித்து மக்களை வெளியேற்ற டெல்லி பாஜக அரசு முயற்சிகளை மேர்கொண்டு வருகிறது.
இந்த முடிவை கைவிட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த பகுதியில் 700க்கும் மேலான குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ெடல்லி அரசின் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அப்பகுதி தமிழர்கள் பல்வேறு விதமாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜங்புரா பகுதியில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மதராசி குடியிருப்பை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து டெல்லி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அவர்கள் டெல்லி காந்தி சமாதி பகுதியிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். சிலரை பேருந்தின் மூலம் அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஜங்புரா தமிழர்கள் கூறுகையில், ‘பாஜக அரசு எங்களை குடியிருப்பில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்பகுதியில் மேம்பாலம் புனரமைப்பு, கால்வாய் தூர்வாரும் பணி, மெட்ரோ பணி ஆகியவை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு வாழும் சுமார் 500 குடும்பங்களை மாற்று இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாற்று இடம் 40 கிமீ தொலைவில் உள்ளதால் குழந்தைகளின் கல்வி பாதிக்கும்; பணிக்கு செல்பவர்கள் தங்கள் வேலை இழக்க நேரிடும். எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும். எனவே ஜங்புராவின் மதராசி குடியிருப்பை அகற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்றனர்.
The post தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி; டெல்லி ஜங்புரா தமிழர்கள் போராட்டம்: குடியிருப்பை அகற்றும் பணியை கைவிட கோரிக்கை appeared first on Dinakaran.