திருவண்ணாமலை, ஜன. 14: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசன வரிசையை முறைப்படுத்திய ஊழியரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையில் நேற்று மார்கழி மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சிரிவலம் சென்று வழிபட்டனர். மேலும், அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை காணப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சுவாமி சன்னதிக்கு எதிரே தரிசன வரிசையை முறைப்படுத்தும் பணியில் கோயில் ஊழியர் பாண்டியன் என்பவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, வரிசையில் இருந்து விலகி மாற்று வழியில் செல்ல முயன்றவர்களை தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஆத்திரம் அடைந்த நான்கு பேரும் கோயில் ஊழியர் பாண்டியன் சரமாரியாக தாக்கினர். அதைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து கோயில் ஊழியர் பாண்டியனை மீட்டனர். மேலும், ஊழியரை தாக்கிய நான்கு பேரையும் பிடித்து டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், சென்னை தி.நகரைச் சேர்ந்த ஹரிகரன், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் பாலாஜி, சூர்யா விக்னேஷ் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, கோயில் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தாக்கியதாகவும் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
The post தரிசன வரிசையில் முறைப்படுத்திய ஊழியரை தாக்கிய 4 பேர் கைது சென்னையை சேர்ந்தவர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.