தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை

2 weeks ago 5

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்கக் கடலோரம் தரங்கம்பாடி எனும் மீனவக் கிராமம் அமைந்துள்ளது. புறநானூறு, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்கள் இவ்வூரைப் பொறையாறு என்று குறிப்பிடுகிறது. அக்காலத்தில் இவ்வூர் துறைமுகமாக இருந்துள்ளது. இப்பகுதியை பெரியன்கிழான் என்பவர் ஆண்டுவந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்கு மாசிலாமணிநாதர் எனும் சிவன் கோயில் கடற்கரை அருகில் உள்ளது. இங்குள்ள முதலாம் குலசேகரபாண்டியனின் கி.பி.1305ஆம் ஆண்டு கல்வெட்டில், ‘சடங்கன்பாடியான குலசேகரன் பட்டினத்து உடையார் மணிவண்ணீசுரமுடையார்க்கு’ என்றுள்ளது. அதுபோல, சடங்கன்பாடி என்ற பெயரே மருவி பின்னர் தரங்கம்பாடி என அழைக்கப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி என்றால் ‘அலைகள் கவி பாடும் இடம்’ என்பதாகும். பாரம்பரிய வணிகத் துறைமுக நகரமான தரங்கம்பாடியில் டென்மார்க் நாட்டினர் டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் வணிக நிறுவனம் ஒன்றை நிறுவுவதற்கு அப்போது தஞ்சையை ஆண்டுவந்த ரகுநாத நாயக்கரை அணுகி அவரின் ஆணைக்கிணங்க 1620ஆம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த கப்பல் தளபதி ஒவ்கிட்டே என்பவர் மன்னனுடன் ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒப்பந்தமிட்டு டேன்ஸ்பர்க் என்ற இக்கோட்டையைக் கட்டினார். இதற்கான ஒப்பந்த ஆணை தங்க இலையில் தமிழில் எழுதப்பட்டு ரகுநாத நாயக்கரால் தெலுங்கில் கையொப்பம் இடப்பட்டது. தற்சமயம் கோபன்ஹேகனில் உள்ள டேனிஷ் அரசுக் காப்பகத்தில் இந்தக் கையெழுத்துப் பிரதி காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

இக்கோட்டை 200 அடி நீளம் மற்றும் 36 அடி அகலம் என்ற அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோட்டையின் முதன்மை வாயில் வடக்கில் உள்ளது. கீழ்த் தளத்தில் கிழக்கு – மேற்காக மூன்று அறைகளும், வடக்கு-தெற்காக நான்கு அறைகளும் உள்ளன. இவ்வறைகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய இருக்கும் பொருட்களைப் பாதுகாக்கும் கிடங்குகளாகவும், வீரர்கள் ஓய்வெடுக்கவும், முதல் தளம் கவர்னர் மற்றும் மதக் குருமார் தங்குவதற்கேற்ப நிர்மாணிக்கப்பட்டது. கோட்டையைச் சுற்றி அகழி எழுப்பப்பட்டு பாலங்களும் உருவாக்கப்பட்டன. மேலும் எதிரிகளைத் தாக்குவதற்காக பீரங்கிகளும் நிறுவப்பட்டன. இக்கோட்டை டேனிஷ் கட்டடக்கலைப் பாணியில் பெரிய அரங்குகள், உயர் கூரைகள், வளைவுகளுடன் கட்டப்பட்டுள்ளது. டேனிஷ்காரர்கள் வடிவமைத்த கட்டட வரைபடத்தைத் தமிழகக் கட்டுமானக் கலைஞர்களும், தொழிலாளிகளும் சேர்ந்து கட்டினர்.

இக்கோட்டையில் முன்பு தேவாலயமாகப் பயன்படுத்தப்பட்ட இடம் தற்போது அரசு அருங்காட்சியகமாக செயல்படுகின்றது. இக்கோட்டைக்கு அருகே கி.பி 1701ஆம் ஆண்டில் சீயோன் தேவாலயம், கி.பி. 1718ஆம் ஆண்டில் ஜெருசலேம் தேவாலயம், கி.பி.1784ஆம் ஆண்டில் ஆளுநர் பங்களா, ஏழாம் கிருஷ்டியானின் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1792ல் கோட்டை நுழைவுவாயில் கட்டப்பட்டது. அதேபோல 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கல்லறைகளும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. பத்தலோமயுஸ் சீகன்பால்க் மற்றும் கென்றிச் புளுட்டாச்சோ ஆகியோர் டென்மார்க் அரசரின் உத்தரவின் பேரில் கி.பி. 1705ஆம் ஆண்டு மதப்பிரசாரத்துக்காகத் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்திய மொழியில் முதன்முதலாக விவிலியம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சுருவாக்கம் செய்து தரங்கம்பாடியில் சீகன் பால்க் தான் கி.பி. 1714ல் வெளியிட்டார். தரங்கம்பாடி கி.பி 1845ஆம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது. அதன்பிறகு இந்த கோட்டை தன் பொலிவை இழந்தது.

The post தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை appeared first on Dinakaran.

Read Entire Article