கோவை, அக்.11: கோவை நகரில் சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவை நகரில் பதட்ட பகுதிகளை கண்காணிக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் செயல்படாமல் சும்மா கிடந்த புறக்காவல் நிலையங்களை பெயிண்ட் அடித்து சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோவை மாநகர போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து நகரில் 70க்கும் மேற்பட்ட புறக்காவல் நிலையங்கள் சீரமைக்கப்பட்டது. உக்கடம், கோட்டை மேடு, கரும்புக்கடை, போத்தனூர், செல்வபுரம், பூமார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் உள்ள புறக்காவல் நிலையங்கள் சீரமைக்கப்பட்டது. இங்கே தினமும் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து பணி நடத்த போலீசார் மற்றும் ஏரியா கண்காணிப்பு பணியில் உள்ள பீட் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு வருகிறது.
பெரிய கடை வீதி, உக்கடம் உள்ளிட்ட சில புறக்காவல் நிலையங்களில் காலை, மாலை நேரங்களில் போலீசார் பணியாற்றி வருகின்றனர். இங்கே பொதுமக்களிடம் புகார் பெறப்பட்டு விசாரணை நடக்கிறது. பீட் போலீசார் சிலர் புறக்காவல் நிலையங்களை மையமாக வைத்து பணிகளை செய்து வருகின்றனர். போலீசார் அடிக்கடி புறக்காவல் நிலையத்தில் இருப்பதால் பொது இடங்களில் குற்றவாளிகள் நடமாட்டம் கணிசமாக குறைந்து வருகிறது.
The post தயார் நிலையில் ‘போலீஸ் அவுட் போஸ்ட்’ appeared first on Dinakaran.