தயார் நிலையில் அரசு

3 months ago 17

தெ ன்கிழக்கு வங்கக்கடலில் நேற்று அதிகாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அவர் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமான பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும். கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூட வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும். குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு உதவி எண்கள், செயலி, வாட்ஸ் அப் எண்கள் என பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை தமிழக அரசு செய்துள்ளது. மழைநீர் அதிகளவு தேங்கும் இடங்களில் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 21 ஆயிரம் பேர் சுழற்சி முறையில் பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மழை பாதிப்பு அதிகம் எதிர்பார்க்கப்படும் மற்ற மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மழை தொடர்பான புகார்கள் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை கண்காணிக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் உடனடியாக செல்ல வேண்டும் என தலைமை செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தி உள்ளார். தேவையான இடங்களில் பேரிடர் மீட்பு படை மற்றும் படகுகள் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின் உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். சமூக வலைதளம் மூலம் புகார் அளிப்பவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் புகாரை பதிவிட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிகனமழையை எதிர்கொள்ள அரசும், அரசு இயந்திரமும் அதிக முனைப்போடும், எச்சரிக்கையோடும் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

The post தயார் நிலையில் அரசு appeared first on Dinakaran.

Read Entire Article