'தம்பி என்ற உறவு வேறு... கொள்கையில் எதிரி வேறு..' - சீமான்

2 months ago 15

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். விஜய் கட்சி தொடங்கியது முதல் அவருக்கு ஆதரவாகவே சீமான் பேசி வந்தார். இந்த சூழலில், கடந்த மாதம் 27ம் தேதி த.வெ.க. மாநில மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய விஜய், திராவிடமும் தமிழ் தேசியமும் தங்களது இரு கண்கள் என்று பேசி இருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், விஜய்யை நேரடியாக சாடினார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, "அது கொள்கை இல்லை. அழுகிய கூமுட்டை. ஒரு சாலையில் இடதுபுறம் நிற்க வேண்டும் அல்லது வலது புறம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி வந்து மோதிவிடும். சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் இது இல்லை தம்பி. நெஞ்சு டயலாக்.

நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் அல்ல. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். நான் குட்டிக் கதை சொல்பவன் அல்ல தம்பி. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிதான் பெரியார், அம்பேத்கர் எல்லாம் படிக்க வேண்டும். நாங்கள் படித்து அதில் பி.ஹெச்டியே வாங்கிவிட்டோம். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ. எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்ட வேண்டாம். 2026-ம் ஆண்டு என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது" என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், "திராவிடமும் தமிழ் தேசியமும் எப்படி ஒன்றாக முடியும்? . எதற்காக திராவிடம்..? எதற்காக தமிழ் தேசியம் என்று யார் சொல்லுவார்கள்..?. விஷமும், விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?.

இரு மொழி கொள்கை என்பது ஏமாற்று கொள்கை. மும்மொழி கொள்கை என்பது மோசடி கொள்கை, இரு மொழி கொள்கை என்பது ஏமாற்று கொள்ளை, தமிழ் எங்கள் கொள்கை. நான் சொல்லுவது குட்டிக்கதை அல்ல, வரலாறு.

வில்லனும் கதாநாயகனும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்.?. எங்கள் கொள்கைக்கு எதிராக நின்றால் பெற்ற தாய், தந்தையாக இருந்தாலும் எதிரிதான். இதில் அண்ணன் என்ன, தம்பி என்ன? ரத்த உறவை விட கொள்கை உறவே எங்களுக்கு பெரிது.

திராவிடம் என்றால் என்ன என்பது குறித்து விஜய் கட்சியில் விளக்குவார்களா..? மதுக்கடையை தமிழ் தேசியம் மூடச் சொல்லும்.. மதுக்கடைகளை திராவிடம் திறக்கும் " என்று அவர் கூறினார்.  

Read Entire Article