திண்டுக்கல்: தமிழ்நாட்டுக்கு விரோதமான நிலைப்பாட்டைதான் எடப்பாடி தலைமையிலான அதிமுக எடுத்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறினார். திண்டுக்கல்லில் அவர் அளித்த பேட்டி: இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்டங்களை திரும்ப பெறக் கோரி மே 20ம் தேதி நடக்கவுள்ள பொது வேலை நிறுத்தம் ரயில் மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க உள்ளது. இதில் திமுகவும் பங்கேற்பது வரவேற்கத்தக்கது. டெல்லி அனைத்து கட்சி கூட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி மோடி கலந்து கொள்ளாதது சரியல்ல.
பஹல்காம் சம்பவம் நடந்த தினத்திலிருந்து சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என கூறி வருகிறோம். ஆனால், இதுபற்றி ஒன்றிய அரசு கருத்து கூட தெரிவிக்கவில்லை. எல்லை மாநிலங்களைத் தவிர சம்பந்தமில்லாத அனைத்து மாநிலங்களிலும் போர் ஒத்திகை என்ற பெயரில் மக்களுக்கு அச்சத்தை உருவாக்கி வருகின்றனர். இதை தவிர்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை நேரில் சந்தித்த பிறகு தமிழகத்திற்காக நான் இந்த கோரிக்கை வைத்துள்ளேன் என கூறவில்லை.
ஆனால், 100 நாள் வேலைக்கு நிதி ஒதுக்கீடு செய்த பின்பு நான் கேட்டு கொண்டதினால் தான் நிதி ஒதுக்கீடு செய்தனர் என கூறுவது ஏற்புடையதல்ல. தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4,000 கோடியில் ரூ.2,999 கோடி நிதியை பலகட்ட போராட்டங்கள், முதலமைச்சர் கடிதம் எழுதிய பிறகுதான் ஒதுக்கீடு செய்துள்ளனர். தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக ஒன்றிய அரசிடம், உள்துறை அமைச்சரிடம் எடப்பாடி பழனிச்சாமி எப்போது பேசியது கிடையாது. தமிழ்நாட்டுக்கு விரோதமான நிலைப்பாட்டை தான் எடப்பாடி தலைமையிலான அதிமுக எடுத்துள்ளது. இவ்வாறு சண்முகம் கூறினார்.
The post தமிழ்நாட்டுக்கு விரோதமான நிலைப்பாடு எடுக்கும் அதிமுக: மார்க்சிஸ்ட் செயலாளர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.