
சென்னை,
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயிலுக்கு இடையில் இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக இந்த மழை பெய்ய இருக்கிறது.
அதன்படி, இன்று (வியாழக்கிழமை) முதல் நாளை மறுதினம் (சனிக்கிழமை) வரையிலான 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.
மேலும், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை (வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுதினம் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யக் கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், மழை காரணமாக அந்த நாட்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.