சென்னை: தமிழ்நாட்டில் ஒரு வருடத்திற்கு 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பிரசவங்கள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் பிரசவத்தின்போது தாய் மற்றும் சேய் உயிரிழப்புகளை தடுக்க சுகாதாரத்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக கடந்த மாதம் மகப்பேறு மரண விகிதம் பூஜ்ஜியம் நிலைக்கு கொண்டு வர சிறப்பு பணிக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்புகள் மற்றும் சிசு மரணங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு மரண விகிதம் 2020-21 ல் 73.0, 2021-22ல் 90.5, 2022-23ல் 52.0 ஆகவும் இருந்த மகப்பேறு மரண விகிதம் கடந்த 2023-24 நிதியாண்டில் 45.5 என்ற அளவில் குறைந்தது. இந்த விகிதம் 2024-25ம் நிதியாண்டில் கடந்த அக்டோபர் 2024 வரை 39.4 என்ற விகிதமாக குறைந்துள்ளது. குழந்தை மரண விகிதம் 2020- 21ல் 9.7, 2021-22ல் 10.4, 2022-23ல் 10.2 ஆகவும் இருந்த குழந்தை மரண விகிதம், கடந்த 2023-24 நிதியாண்டில் 8.2 என்ற அளவில் குறைந்தது.
இந்த விகிதம் 2024-25ம் நிதியாண்டில் கடந்த அக்டோபர் வரை 7.7 என்ற விகிதமாக குறைந்துள்ளது. மாவட்ட அளவில் திருவள்ளுர் மட்டும் 5.7 விகிதமாக உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடி மாவட்டமாக மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுகாதார அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எடுத்த நடவடிக்கைகள் தாய்மார்கள், குழந்தைகளின் இறப்புகளைக் குறைத்துள்ளன. தமிழ்நாட்டில் மகப்பேறு மரண விகிதமும் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. மகப்பேறு மரண விகிதம் பூஜ்ஜியம் நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணமாக இருக்கின்றது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post தமிழ்நாட்டில் குழந்தை மரண விகிதம் திருவள்ளூர் மாவட்டத்தில் குறைவு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.